Friday, November 25, 2011

ஓரிடம் - மனுஷ்ய புத்திரன்

ஓரிடம்

முன்பொரு நாள் நல்ல இருட்டில்
கள்வனைப்போல வந்தவீட்டிற்கு
இன்று நான்
நல்ல வெளிச்சத்தில்
விருந்தாளியாக வருகிறேன்

ஒரு புதிய இடத்திற்குப்
பழகுவதைவிட குழப்பமானது
ஒரு பழைய இடத்தில்
புதிய இடம்போல பழகுவது

அந்தப் படிக்கட்டுகளில்
எத்தனை படி இருக்கிறது என்று
எனக்குத் தெரியும் என்ற போதும்
நான் அதை மறுபடி எண்ணுகிறேன்
ஒன்று குறைவாகவோ
ஒன்று கூடுதலாகவோ இருக்கிறது

புத்தக அலமாரியில்
நான் எந்தப் புத்தகத்தை
எடுத்துப் பிரித்துவிட்டு
எப்படி வைத்தேனோ
அது அதே இடத்தில்
அப்படியே இருக்கிறது

ஒரு விசித்திரமான
கலைவேலைப்பாடுடைய திரைச்சீலையை
எங்கே வாங்கினீர்கள் என்று
நான் அதை அப்போதுதான் பார்ப்பதுபோல கேட்கும்போது
அந்தத் திரைச் சீலை
தனக்குத் தானே ஒரு முறை அசைகிறது

இடது புறம்
கடைசி அறையின் ஜன்னலின் வழியாக
ஆகாயத்தின் விசித்திரமான கோணம்
ஒன்றைக் கண்டேன் என்று சொல்ல விரும்பினேன்
இந்தக்கோணம் இப்போதும் அங்குதான்
இருக்கிறதா என்று ஒரு கணம் பார்க்க விரும்பினேன்

நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன்
குளிர்ந்த தண்ணீரால் முகத்தை நனைத்துக்கொள்கிறேன்
‘இங்கே தண்ணீரில் உப்பு அதிகம்’ என்று சொல்லப்படுகிறது
அதை நான் அறிவேன்
அந்த உப்பு எவ்வளவு அடர்த்தியானது என்பதை
அது எவ்வாறு என்னை சாரமாக்கியது என்பதை
அதை ஒருவரால் ஒருபோதும் கடக்க முடியாது என்பதை

அன்று என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த
ஆர்கிட் செடி காணாமல் போயிருந்தது
நான் அதை அறிய முடியுமா
ஒரு ஆர்கிட் செடியை நாம் ஏன் இழக்கிறோம் என்பதை
அவை ஏன் நம் சீதோஷ்ண நிலைகளைத் தாக்குப்பிடிப்பதில்லை என்பதை
நான் அதை ஒருபோதும் அறிய முடியாது
என்னைப் பொறுத்தவரை
அந்த செடி எப்போதுமே
என்னுடைய உலகில் இருந்திராத ஒன்று

‘உங்களுடைய காபி சுவையாக இருக்கிறது’
என்றபடியே காலிக் கோப்பையை
மேசையின் மேல் வைக்கிறேன்
இந்த உலகில்
இரண்டாம் முறையும் அதே போல சுவையுடைய காபி
ஒரு முறைகூட
எங்குமே தயாரிக்கப்படவில்லை என்பது
நமக்குத் தெரியும்
இருந்தும் நான் அதைச் சொல்கிறேன்

நான் விடைபெறும் முன்
அந்த உயரமான நிலைக் கண்ணாடியில்
ஒரு முறை என்னைப் பார்த்துக் கொள்ள விரும்பினேன்
அது என்னைப் பதட்டமடைய வைக்கிறது
வேறொரு நாளில் அது தேக்கி வைத்த
எனது பிம்பத்தை ஒரு கணம்
தவறுதலாகக் காட்டி மறைக்கிறது

அன்பே
எந்த அறையின் சுவர்களில்
உன்னைச் சாய்த்து முத்தமிட்டேனோ
அந்தச் சுவரின் எரியும் வண்ணத்தில்
சாய்ந்து நிற்கிறேன்
அவ்வளவு நிராசையுடன்
அவ்வளவு தனிமையுடன்
மனிதர்களிடம் நடிப்பதுபோல
அவ்வளவு எளிதாய் இல்லை
இடங்களிடம் நடிப்பது.

 - மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment