Monday, September 26, 2011

மகாகவி பாரதியார், "காட்சி" வசன கவிதையில்

ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை.
இருளென்பது குறைந்த ஒளி

- மகாகவி பாரதியார், "காட்சி" வசன கவிதையில்.

ஞானப் பாடல்கள் - நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

- மகாகவி பாரதியார்,

கண்ணம்மா-என் காதலி - நாணிக் கண் புதைத்தல்

..............

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன் றடீ!-மிக
நெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை,-அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்.

முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில மிகவல்லர் காண்;-அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில்
ஏதுக்கு நாண முற்றுக் கண்புதைப்பதே?

- மகாகவி பாரதியார்

கண்ணம்மா-என் காதலி - காட்சி வியப்பு

சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நக்ஷத் திரங்க ளடி!

சோலை மல ரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
நெஞ்சி லலைக ளடி!
கோலக் குயி லோசை-உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-இது பார்.
கன்னத்து முத்த மொன்று!

- மகாகவி பாரதியார்

Friday, September 23, 2011

மனுஷ்யபுத்திரன்

கடவுள் உங்களோடு
பேசுவதை நிறுத்திவிடுவார்,
எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள்
உங்களுடைய சொற்களால் நிரப்பும்போது.
- மனுஷ்யபுத்திரன்

மேத்தா, "கற்பூர பொம்மை ஒன்று" பாடலில்

என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்,
உன் பேச்சு நாளும் செந்தேன்குழல்
- மேத்தா, "கற்பூர பொம்மை ஒன்று" பாடலில்

நா முத்துக்குமார், "இறகைப் போலே அலைகிறேனே" பாடலில்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்,
மீதி நெஞ்சிலே என்பதும்,
புரியுதே புரியுதே காரணம்.
நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே,
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே!!!

- நா முத்துக்குமார், "இறகைப் போலே அலைகிறேனே" பாடலில்

வைரமுத்து, "சொல்லாயோ சோலைக்கிளி" பாடலில்

பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே,
ஒற்றைக்கிளி ஒளிதல் போல,
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்...

பச்சைக் கிளி மூக்கைப்போல,
வெட்கம் உன்னைக் காட்டி கொடுக்க,
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்!!!

- வைரமுத்து, "சொல்லாயோ சோலைக்கிளி" பாடலில்

காண்பதெல்லாம் மறையுமென்றால்

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதெல்லாம உறுதியில்லை
காண்பது சக்தியாம் -இந்தக் காட்சி நித்தியமாம்

- பாரதி

சந்திரபாபு

அவன் கனவில் அவள் வருவாள்,
அவனை பார்த்து சிரிப்பாள்;
அவள் கனவில் யார் வருவார்?
யாரை பார்த்து அழைப்பாள்?

- சந்திரபாபு

நா முத்துக்குமார், "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலில்

உன்னோடு நானும் போகின்ற பாதை,
இது நீளாதோ தொடு வானம் போலவே?
கதை பேசிக் கொண்டே, வா காற்றோடு போவோம்.
உரையாடல் தீர்ந்தாலும், உன் மெளனங்கள் போதும்.
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?
- நா முத்துக்குமார், "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலில்

வைரமுத்து, "புது வெள்ளை மழை" பாடலில்

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை;
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை.

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது?

- வைரமுத்து, "புது வெள்ளை மழை" பாடலில்

தாமரை, "மேற்கே மேற்கே" பாடலில்

அட தேவைகள் இல்லை என்றாலும்,
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்;
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ????
- தாமரை, "மேற்கே மேற்கே" பாடலில்

வைரமுத்து, "காடு திறந்தே" பாடலில்

பூமிக்கு வந்த பனித்துளி நான்,
சூரியனே என்னைக் குடித்துவிடு.

யுகம்யுகமாய் நான் எரிந்துவிட்டேன்,
பனித்துளியே என்னை அணைத்துவிடு.

- வைரமுத்து, "காடு திறந்தே" பாடலில்

நா முத்துக்குமார், "பூக்கள் பூக்கும் தருணம்" பாடலில்

வேரின்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?

- நா முத்துக்குமார், "பூக்கள் பூக்கும் தருணம்" பாடலில்

சினேகன், "ஹைய்யோ நெஞ்சு அலையுதடி" பாடலில்

உன் வாசம் அடிக்கிற காத்து,
என்கூட நடக்கிறதே!!!
என் சேவல் கூவுற சத்தம்,
உன் பேரா கேட்கிறதே!!!!

- சினேகன், "ஹைய்யோ நெஞ்சு அலையுதடி" பாடலில்

கண்ணதாசன், "அனுபவம் புதுமை" பாடலில்

அவள் எங்கே என்றாள்
நான் இங்கே நின்றேன்;
அவள் அங்கே வந்தாள்,
நாங்கள் எங்கோ சென்றோம்!!!

- கண்ணதாசன்,  "அனுபவம் புதுமை" பாடலில்

கபிலன், "உன் சமையலறையில்" பாடலில்

என் இடது கையில் பத்து விரல்,
உன் வலது கையில் பத்து விரல்...
தூரத்து மேகம் தூறல்கள் சிந்த,
தீர்த்த மழையில் தீக்குளிப்போம்!

- கபிலன், "உன் சமையலறையில்" பாடலில்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கனக்குதடி !

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!

இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை !
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!

யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை !
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை !

அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் !
ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய் !

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

- வைரமுத்து

வைரமுத்து

கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற கால்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர்தந்த சப்தங்கள் நீயா?
எனை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்;
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்;
வார்த்தைக்குள் ஊடாடும் உள் அர்த்தம் நீதான்;
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்.
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்னியாய் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடி கொண்டவளும் நீதான்!

- வைரமுத்து

கமல்ஹாசன், "நீ பார்த்த பார்வைக்கு" பாடலில்

நான் என்ற சொல் இனி வேண்டாம்,
நீ என்பதே இனி நான் தான்,
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை,
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை,
உயிரே வா…

- கமல்ஹாசன், "நீ பார்த்த பார்வைக்கு" பாடலில்

வைரமுத்து

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்;
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்???
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என்
இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்
- வைரமுத்து

கங்கை அமரன், "இதுவரை இல்லாத உணர்விது" பாடலில்...

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய,
எப்போது என் உண்மை நிலை அறிய?
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே!

இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

- கங்கை அமரன், "இதுவரை இல்லாத உணர்விது" பாடலில்

பழனிபாரதி, "நிலவு பாட்டு " பாடலில்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா?
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா?
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்.
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்.
குயில்கள் மலர்கள் அதிசயம்;
கனவுகள் கவிதைகள் ரகசியம்!!!
......................................................................

கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை?
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை?
இது ஒரு புதுவிதப் பரவசம்,
மயக்குது இசையென்னும் அதிசயம்!!!

- பழனிபாரதி, "நிலவு பாட்டு " பாடலில்

அறிவுமதி, "முத்தமிழே முத்தமிழே " பாட்டில்...

காதல் வழிச்சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை,
நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை.

- அறிவுமதி, "முத்தமிழே முத்தமிழே " பாட்டில்...

வைரமுத்து, "இளைய நிலா" பாடலில்

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தொலைந்ததனால் அழுகிறதோ?
அது மழையோ?

- வைரமுத்து, "இளைய நிலா" பாடலில்

கண்ணதாசன், "கண்ணே கலைமானே" பாடலில்

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்,
எந்நாளும் எனை நீ மறவாதே;
நீயில்லாமல் எது நிம்மதி?
நீதான் என்றும் என் சந்நிதி.

- கண்ணதாசன், "கண்ணே கலைமானே" பாடலில்

நா முத்துக்குமார், "சிறகுகள் வந்தது எங்கோ செல்ல" பாடலில்

அழகே நீ எங்கிருக்கிறாய்?
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்.
உயிரே நீ என்ன செய்கிறாய்?
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

- நா முத்துக்குமார், "சிறகுகள் வந்தது எங்கோ செல்ல" பாடலில்

நா.முத்துக்குமார், "எனக்கு பிடித்த பாடல்" பாட்டில்...

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ -
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ;

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்;
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்;

ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்;
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்.

- நா.முத்துக்குமார், "எனக்கு பிடித்த பாடல்" பாட்டில்...

Philosopy...

Change won't come to you everytime; you must bring the change.
by

.................
.................
.................
.................
.................
.................

Mr. Munusami, 315L, BMTC bus conductor ;-)

மொக்கை

ஒரு மனுஷன் செத்தா 2 ப்ராப்ளம் இருக்கு, எரிக்கறதா இல்ல புதைக்கிறதா?
எரிச்சா ஓகே, புதைச்சா 2 ப்ராப்ளம் இருக்கு; அங்க புல் முளைக்குமா இல்லையா?
இல்லேன்னா ஓகே, முளைச்சா 2 ப்ராப்ளம் இருக்கு; அத மாடு திங்குமா இல்லையா?
இல்லேன்னா ஓகே, தின்னா 2 ப்ராப்ளம் இருக்கு; அது பால் கறக்குமா கறக்காதா?
கறக்கலேன்னா ஓகே, கறந்தா 2 ப்ராப்ளம் இருக்கு; அத குடிக்கலாமா கூடாதா?
கூடாதுன்னா ஓகே, குடிக்கலாம்னா 2 ப்ராப்ளம் இருக்கு; குடிச்சப்புறம் உயிரோட இருப்போமா மாட்டோமா?
இருப்போம்னா ஓகே,  செத்துருவோம்னா 2 ப்ராப்ளம் இருக்கு,  அத முதல் வரியில படிங்க....

'நான் கொன்ற பெண்' - - பிரகாஷ்ராஜ், சொல்லாததும் உண்மை தொடரில்

'நான் கொன்ற பெண்' என்று ஒரு கதை. ஆனந்தா என்கிற கன்னட எழுத்தாளர் எழுதினது. என் நம்பிக்கைகளை மாத்தின கதை அது.

கோயில்களைத் தேடித் தேடிப் போய் ஆராய்ச்சி செய்யற ஒருத்தன் ஊர் ஊரா போயிட்டிருக்கும்போது, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கோயிலைப் பத்திக் கேள்விப்பட்டு, அதைப் பார்க்க அழகான ஒரு கிராமத்துக்குப் போறான்.

நல்ல அழகன். திறமைசாலி. அவனை அந்த ஊர்ப் பெரியவர் ரொம்ப மரியாதையோடு வரவேற்கிறார். கூடவே இருந்து சுத்திக் காட்டி, ஆதாரங்கள் சொல்லி உதவி செய்யறார். ராத்திரி அந்த ஊரிலேயே தங்க வேண்டிய நிலைமை.ஊர்ப் பெரியவர் அவனைத் தன் வீட்ல தங்கிக்கச் சொல்றார்.

அங்கே ஒரு பேரழகியை, துளசி மாடத்துல அவ விளக்கு ஏத்தும் போது பார்த்துடறான். ஒரு புது ஆம்பளையை வீட்டுக்குள்ள பார்த்ததும், பதறி உள்ளே ஓடிடுரா அவ. அப்ப 'ஜல் ஜல்'கொலுசுச் சத்தம் அவன் காதுக்குள்ளே நிக்குது. தன்னை மறந்து ரசிக்கிறான். 'அந்தப் பெண்ணு யாரு? கல்யாணம் ஆகிடுச்சா?'னு அந்த வீட்டு வேலைக்காரன் கிட்ட விசாரிக்கிறான். அதை அவளோட அப்பா பார்த்துடறார். இது தெரிஞ்சு ரொம்ப தர்ம சங்கடத்தோட படுக்கப் போயிடறான் அவன்.

ராத்திரி கதவு தட்டுற சத்தம் கேட்டுத் திறக்கிறான். புதுப் புடவையில் தேவதை மாதிரி வந்து நிக்கிறா அந்த பொண்ணு.கையில் பால் சொம்பு. முதலிரவுக்கு வர்றவ மாதிரி உள்ளே வந்து கதவைத் தாழ் போட்டுட்டுக் கட்டில்ல உட்கார்றா. ஸ்தம்பிச்சு நிக்கிறான் அவன். 'நீங்க என்னைப் பார்த்து ஆசைப்பட்டீங்களாமே? அதான் அப்பா அனுப்பி வெச்சார்'னு சொல்றா. அதிர்ந்து போறான் அவன். பெத்த பொண்னையே யாரோ ஒருத்தனோட படுக்க அனுப்பியிருக்கானே அப்பன், இவளும் பொண்டாட்டி மாதிரி வந்து கட்டில்ல உட்கார்றாளேன்னு கோவத்துல கத்துறான்.

அதுக்கு அவ, 'நான் தேவதாசி. வரிசையா பெண் குழந்தைகளே பிறந்ததால, அப்பா கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணினாரு. அடுத்து தனக்கு ஆண் குழந்தை பிறந்தா என்னைக் கோயிலுக்கு நேர்ந்து விட்டு தேவதாசி ஆக்குறதா வேண்டிக்கிட்டாரு. பிரார்த்தனை பலிச்சு ஆண் வாரிசு வந்ததால் நான் தேவதாசி ஆகிட்டேன். யாராவது என் மேல ஆசைப்பட்டா அதைத் தீர்த்து வைக்கிறது என்னோட கடமை'னு நிதானமா பேசுறா. அவளோட மூடநம்பிக்கையைத் தன் வார்த்தைகளால் தகர்த்து எரியறான் ஆராய்ச்சியாளன். இப்படி ஒரு பிழைப்பு தேவையான்னு அவன் சொன்ன நியாயங்கள் அவ மனசுல ஆழமா பதியுது.

மறுநாள் காலையில் பார்த்தா, குற்ற உணர்ச்சியால அந்தப் பொண்ணு தூக்கு மாட்டிச் செத்திருப்பா. அவளோட மூட நம்பிக்கையை உடைக்கத் தெரிந்தவனுக்கு, அதுக்குப் பதிலா அவளுக்கு வாழ்க்கை மீது வேற நம்பிக்கை தர முடியல. அல்லது, தரத் தெரியல. தன்னோட தவறை நினைச்சு வருந்தி, அவளைத் தானே கொன்னுட்டதா புலம்ப ஆரம்பிக்கிறான் அவன்.

என் நம்பிக்கைகளை நான் எப்பவும் பிரசாரம் பண்ண விரும்பாததுக்கு இந்தக் கதைதான் காரணம். இன்னொரு வலுவான நம்பிக்கையைத் தர முடியும்ங்கிற உறுதி இருந்தால்தான் மத்தவங்க நம்பிக்கை மேல் கை வைக்கணும். இல்லேன்னா அவங்கவங்களும் தங்களோட நம்பிக்கையோட வாழ்ந்த்துட்டுப் போகட்டும். அதனால லாபம் இல்லாம இருகலாம். நிச்சயமா நஷ்டம் இருக்காது.

- பிரகாஷ்ராஜ், சொல்லாததும் உண்மை தொடரில்.

இரா.பூபாலன்

மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனர்
அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன‌
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

ம‌னுஷ்ய‌ புத்திர‌ன்

பார்வைய‌ற்ற‌ குழ‌ந்தை
ம‌ர‌ப்ப‌டிக‌ளில் இற‌ங்கி
வ‌ந்துகொண்டிருக்கிறாள்
அவ‌ளுக்கு
அது ஒரு பிர‌ச்னையே இல்லை

அவ‌ளாக‌க் க‌ற்பித்துக்கொண்ட‌
இந்த‌ உல‌கின் ஒழுங்கில்
ஏழாவ‌து ப‌டிக்குப் பிற‌கு
ஒன்ப‌தாவ‌து ப‌டி
வ‌ராத‌வ‌ரை

பார்வைய‌ற்ற‌ குழ‌ந்தை
நிதான‌மாக‌வே ப‌டிக‌ளில்
இற‌ங்கிக்கொண்டிருக்கிறாள்

நா.முத்துக்குமார் துளிப்பாக்கள்

உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்.
-------------------------------
குழந்தைகள்
கை காட்டாத
கூட்ஸ் ரயிலில் இருந்து
கொடியசைத்துப் போகிறான்
கடைசிப் பெட்டியில் கார்டு.
--------------------------------
சிறகுகள் உதிர்த்து
வெளிவரும் பறவை
கூண்டிற்கு விடுதலை.
--------------------------------
பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.
--------------------------------
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணடிகள்.
--------------------------------

ஒரு சக்கர நாற்காலியின் பயன்பாடுகள் - மனுஷ்ய புத்திரன்

ஒரு நாற்காலியின் பயன்பாட்டைவிட பலமடங்கு அதிகமானவை.

நாற்காலியை இழந்துவிடுவோம்
என்கிற பயத்திற்கு இதில்
அவசியமே இல்லை

எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை

எல்லோரும் நின்றுகொண்டிருக்கும் வரிசையில்
நாம் நிற்க வேண்டியதில்லை

நமது பின்புறத்தைக் காட்டி
யாரையும் அவமானப்படுத்த நேர்வதில்லை

புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை

நாட்டின் முதல் குடிமகன்கள்
சபையில் நுழையும்போது
நம் இருக்கைகளிலிருந்து பதட்டமடையவேண்டியதில்லை

கீழ்நிலை ஊழியர்களை
ஒருபோதும் அமரச்சொல்லாத
எஜமானர்களின் தந்திரங்கள்
நம்மிடம் பலிப்பதில்லை

இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை
யாருக்கும் வழிகாட்டிச் செல்லவோ
யாரையும் பின்தொடரச் செய்யவோ
யாரோடும் இணைந்து நடக்கவோ
வேண்டியதில்லை

எந்த இடத்திலும்
முண்டிக்கொண்டு செல்லவேண்டியதில்லை

முக்கியமாக
சக்கரநாற்காலிகள்
பூமியின் எந்த மையத்தோடும்
பிணைக்கப்படுவதே இல்லை

மனுஷ்ய புத்திரன்


சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை ரத்தம்
பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி

கடவுளுடன் பிரார்த்தித்தல் - மனுஷ்ய புத்திரன்

இன்று நீ
கைவிடப்பட்டிருக்கிறாய்

அல்லது அது
உன்னைப் போன்ற
யாரோ ஒருவராகவும் இருக்கலாம்

இது உனக்கு நிகழ்வது
எத்தனையாவது முறை
என்று நீ எண்ண வேண்டியதில்லை

ஒரு குழந்தையாக
மீண்டும் பிறப்பதுபோல
ஒரு துரோகத்திலிருந்து
அல்லது
ஒரு கைவிடப்படுதலிருந்து
நீ புத்தம் புதியதாய்
உன் பூமிக்குத் திரும்புகிறாய்

நீ கைவிடப்படும்போதுதான்
உன் பிரியத்தின் கனல் எரியத் தொடங்குகிறது
பிரியமற்றுக் குளிர்ந்த ஒவ்வொரு கரத்தையும்
அந்தக் கனல் வெதுவெதுப்பாக்குகிறது

கைவிடப்படும்போது
நீ தனியாக இருப்பதாக உணர்கிறாய்
ஆனால் நாம் தனியர்கள் அல்ல

இந்த உலகம்
கைவிடப்பட்ட பெண்கள்
கைவிடப்பட்ட குழந்தைகள்
கைவிடப்பட்ட முதியவர்கள்
கைவிடப்பட்ட குடிகாரர்கள்
கைவிடப்பட்ட பைத்தியங்கள்
கைவிடப்பட்ட உபயோகமற்றவர்கள்
கைவிடப்பட்ட நோயாளிகள்
கைவிடப்பட்ட உடல் சிதைக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட தண்டிக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட கிறிஸ்துகளின்
உலகம்

அரவணைக்கப்பட்டவர்களைக் காட்டிலும்
பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது
கைவிடப்பட்டவர்களின் சமூகம்
நாம் பயப்பட ஒன்றுமில்லை

கைவிட்டவர்களை
நாம் தண்டிக்கவோ
மன்னிக்கவோ ஒன்றுமே இல்லை

மாறாக கைவிடப்படுதல் துக்கமல்ல
ஓரு நீண்ட கனவு தரும் களைப்பு
ஒரு பழக்கத்தை விட்டுவிடும் சமன்குலைவு

இன்று உன்னை
ஒருவர் கைவிடும்போது
கடவுள் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்

கைவிடப்பட்ட எல்லோருக்காகவும்
அவர் முடிவில்லாத பிரார்த்தனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்

நீ கைவிடப்படும்போது மட்டுமே
கடவுளோடு சேர்ந்து பிரார்த்திக்கும்
மகத்தான வேளை
உனக்குக் கிடைக்கிறது

முகுந்த் நாக‌ராஜ்

'குமரிப்பெண்' 'வினிதா'
'மும்தாஜ்' 'மருதம்'
'ஜாலி' 'கன்னி'
'இர‌வுப் ப‌ற‌வை' 'கும்த‌ல‌க்கா'
'உங்க‌ள் வ‌ச‌ந்தி' 'குளிர்கால‌ சுந்த‌ரி'
என்று ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ளைப்
ப‌டித்த‌ பின்ன‌ரும்
ப‌ள்ளிக்கூட‌த்திலிருந்து
திரும்பிவ‌ரும் வ‌ழியில்
ர‌யில் த‌ண்ட‌வாள‌த்தில் கிட‌ந்த‌,
அட்டையில்லாத‌
கிழிந்த‌ புத்த‌க‌ம் போல் ஒன்று
ப‌டிக்க‌க் கிடைக்க‌வில்லை இன்னும்.
அப்ப‌டி என்ன‌ விசேஷ‌ம்
அதில் என்று சொல்ல‌
அந்த‌ப் புத்த‌க‌ம்
என்னிட‌ம் இல்லை இப்போது
அந்த‌ வ‌ய‌தும்!

உன் கவிதையை நீ எழுது - பசுவைய்யா

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது, உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு

பணிநீக்க உத்தரவு - மனுஷ்ய புத்திரன்

எப்போதும்போல்
வீட்டிற்குக் கிளம்பும்போது
அவளது பணிநீக்க உத்தரவு
தரப்பட்டது

வருத்தமோ
கோபமோ இல்லாமல்
வழக்கமாகத் தரப்படும்
எதையோ ஒன்றைப்போல

அவள் இனி
அங்கே ஒருபோதும்
வரவேண்டியதில்லை என்பது
அவளுக்குச் சொல்லப்பட்டது

தான் இதற்கு ஆயத்தமாக இருக்கவில்லை
என்பதை அவள் சொல்லவிரும்பினாள்

உடனடியாக ஒரு நாளின்
அத்தனை பழக்கங்களையும் மாற்றிக்கொள்வது
சிரமம் என்று சொல்ல விரும்பினாள்

இந்த வேலை தனக்குப் பிடித்திருந்தது என்றும்
இங்கே எளிமையான பல உறவுகள் இருக்கின்றன
என்றும் சொல்ல விரும்பினாள்

ஆனால் அவள் எதையுமே
சொல்லவில்லை
அதை விவாதிக்கக் கூடாத
புனித ரகசியமாக மாற்றிவிடவேண்டும்
என்று அவளுக்குத் தோன்றியது

ஒரு காதல் கடிதத்தைப்
படிப்பதுபோலவே
அவள் தனது பணிநீக்க உத்தரவைத்
திரும்பத் திரும்பப் படிக்கிறாள்
தெளிவான வாக்கியங்களில்
புலப்படாத ஒன்று  மிச்சமிருப்பதாகவே
அவளுக்குத் தோன்றியது

காமிராவின் லென்சிலிருந்து ஒரு காட்சி
தொலைதூரத்திற்கு விலக்கப்படுவதுபோல
தன்னைச் சுற்றியிருக்கிற
ஒவ்வொன்றும் எவ்வளவு விரைவாக
விலகுகிறது என்பதை
வியப்புடன் பார்க்கிறாள்

சக பணியாளர்கள்
அவள் கண்களைச் சந்திப்பதை
தவிர்க்கின்றனர்
அவளை
ஆறுதல்படுத்தும் பொருட்டு
கோபமாக எதையோ முணுமுணுக்கின்றனர்
அது அவர்களுக்குக்கூட
கேட்டதா என்பது சந்தேகம்

பணிநீக்க உத்தரவை
அப்போதுதான் பிடுங்கப்பட்ட
ஒரு தாவரத்தைப் பார்ப்பதுபோல
பார்க்கிறாள்
அது ஈரமாக இருந்தது
வெப்பமாக இருந்தது
வாசனையோடு இருந்தது
அது உறுதியான
மௌனத்தோடு இருந்தது.

ஆனால் அது
உண்மையில்
ஒரு பிடுங்கப்பட்ட தாவரம் அல்ல
அது தன் கைகளில்
கொஞ்சம் கொஞ்சமாக
வளர்வதை அவள் உணர்கிறாள்
வீட்டிற்குப் போய் சேர்வதற்குள்
அது உண்மையில் பெரிய மரமாகிவிடும்
என அவளுக்கு மிகவும் அச்சமாகவே இருந்தது

முதல் முதலாக
அந்தியின் மஞ்சள் வெயில்
எவ்வளவு அடர்த்தியானது
என்பதைக் கவனிக்கிறாள்

நாளைக் காலையில்
எவ்வளவு தாமதமாக
எழுந்துகொள்ள முடியுமோ
எழுந்துகொள்ளலாம்

நாளை மதியம்
ஆறிப்போன எதையும் சாப்பிட வேண்டியதில்லை

செய்யவேண்டியவையோ
செய்யத்தவறியவையோ
ஒன்றுமே இல்லை

துணி துவைப்பதற்காக
விடுமுறை நாட்களுக்குக்
காத்திருக்க வேண்டியதில்லை

திடீரெனெ
அவ்வளவு பிரமாண்டமாகிவிட்ட உலகம்
அவ்வளவு நிறைய கிடைத்த நேரம்
அவ்வளவு பொறுப்பற்ற தன்மை
அவளைக் கிளர்ச்சியடைய வைக்கிறது

வீடுகளை நோக்கி ஆவேசமாக நகரும்
இந்த சாயங்கால மனித வெள்ளத்தினூடே
எத்தனை பேர்
ஒரு பணிநீக்க உத்தரவுடன்
வீடு திரும்புவார்கள்
என்று நினைக்கத் தொடங்கினாள்

தன்னைப்போல
யாரவது ஒருவர்
நாளைக் காலை
இதே பாதையில் வரத் தேவையற்றவர்கள்
இருக்கிறார்களா
என ஒவ்வொரு முகமாக உற்றுப் பார்க்கிறாள்

இது ஒரு சிறிய பிரச்சினை
ஒரு காபி குடித்தால்
எல்லாம் சரியாகிவிடும் என்று
அவளுக்குத் தோன்றியது

ஒரு நல்ல காபி மட்டுமே
கடவுள்கள், மனிதர்கள் உருவாக்கிய
எல்லாப் பிரச்சினைகளையும்
தீர்க்கக்கூடியது
என்று நினைத்தபடியே
மீண்டும் ஒருமுறை
தனது பணிநீக்க உத்தரவைப்
படிக்கத் தொடங்குகிறாள்

கல்லாலான இதயம் - மனுஷ்ய புத்திரன்

என் சின்னஞ் சிறு மகளுக்கு
இன்றைக்கும்
தன் பள்ளிக்குப் போகும் பாதையை
ஏற்க மனமில்லை

அவளது கேவல்களின் ஓசை
மரங்களில் குடியேறுகிறது
அவளது கண்ணீரின் முத்துக்கள்
வீடெங்கும் சிதறி உருள்கின்றன

இந்த உலகின் நியதிகளின் கையில்
அவளை ஒப்படைத்துவிட்டு
வெகுதூரம் விலகிச் செல்கிறேன்

அவளது நியதியைப் புரிந்துகொள்பவனை
அவள் பரபரத்துத் தேடுகிறாள்
நான் ஒரு கல்லாலான  இதயத்தோடு
அவளிடமிருந்து ஒளிந்துகொள்கிறேன்

ஒரு கல்லாலான இதயம்
பாறையைப் போல கனத்துவிடும்போது
அதை ஒரு வெட்டவெளியில் இறக்கிவைத்துவிட்டு
இளைப்பாறுகையில்தான் பார்த்தேன்
பாறையின் மேல்
அவள் எப்படி
ஒரு இடையறாத மழைத்துளியாக
வந்து பொழிகிறாள் என்பதை

கண்ணம்மா, என் காதலி - மகாகவி சுப்பிரமணிய பாரதி

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.


ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.


சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.


“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”