Monday, June 8, 2026

சூர்பனகை - கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஆனந்த் குமார்

நான் சூர்பனகை 

ராவணசோதரி.

பெயரைக் கேட்டமாத்திரத்தில் 

உங்கள் மனதில் தோன்றுகிறதா 

ஊன்பசிகொண்ட கண்களும்

நகமும்  பல்லும்  

பூமி குலுங்கும் நடையும்  

காட்டைப்பிளந்த வெளிப்படலும்.

அதிலெனக்கு வருத்தமில்லை. 


நாங்கள் காமரூபிகள்.


தூரம் 

என்னை பறவையாக்கும் 

அப்பாலுள்ள 

மலைகளின் பழங்கள் 

என்னை வானரமாக்கும் 

தளிர்கள் 

என்னை மானாக்கும் 

நீர் 

என்னை மீனாக்கும் 


ஆசையின் ரூபம் நான்.


பயமில்லை 

மறையில்லை  

சொல்லும் பொருளும் 

வெவ்வேறில்லை எனக்கு.

வாழ்வின் மாயாஜாலம்   

அதை நான் 

இன்னும் இழக்கவில்லை 


ரதி 

பூரணமாய் ஆட்கொள்கையில் 

தேவ-அசுர-வானர-மானுட பேதமற்று 

எந்த பெண்ணிற்கும்  

எனது இயல்பு 

எனது சர்பவீர்யம்.

சிலர் சீறுவர் 

சிலர் தீண்டுவர் 

நெஞ்சு வெடித்து அழுவர் சிலர் 

சிலர் கிடந்தமாத்திரத்தில் 

மலைகளை கொரிப்பர்.


அவர்கள் ஏங்கித்தவிக்கும் 

பள்ளத்தாக்கில் 

சுதந்திரமாய் 

நடந்து திரிபவள் நான்.

கைநீட்டினால் எட்டாத ஏதுமில்லை 

ராவனசோதரிக்கு 

கொண்டாட்டமே வாழ்வு

 

“ராமனே வாழ்வின் ஒளி” என 

கவி சொன்ன வார்த்தையை 

அவனை நேரில் கண்டபோது 

நானும் உணர்ந்தேன்.

ஆனால், 

ராமன் வாழ்வைப் பயந்தவன்  

அவன் எனக்கு 

தம்பியை கைகாட்டினான் 

அவனும் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தான். 

கோழைகள்

எதிரிகளைவிட நீசர்கள்

அவர்கள் என்னை 

வதைத்து ரசித்தனர்  

கோழைத்தனமும் குரூரமும் 

இரண்டல்ல என 

நான் உணர்ந்தேன் 


முழுமையடையாத காமத்தினால் 

உடைந்து அழுத இணைப்பறவையை 

அறியமுடிந்த மகாகவிக்கு 

என்னை புரியாமல் போனது ஆச்சரியம்.

அல்லது புரிந்ததனால் தந்த 

மஹாரிஷியின் சாபம்தான் 

ராமன் பின்னர் 

அனுபவித்ததெல்லாமுமா?


வென்றதெல்லாம் தோல்விகள்!


இசைபவள் அல்ல சீதையென 

அறிந்த ராவணன் 

அவளுக்கு 

ஒரு வருடத்தை நீட்டிக்கொடுத்தான்  

“நீ காமரூபினி ஆகும்வரை 

நான் உன்னை தொடமாட்டேன்” என 

என் சகோதரன் பக்கத்தில் 

சீதை பாதுகாப்பானவள் 

ராமன் பக்கத்தில் 

நானோ?


காமரூபினியானதினாலேயே 

இன்னும் 

ஏற்கப்படவேண்டியவள்  

பலவீனமானவள்  

தயைக்கு உரியவள் 

காக்கப்பட வேண்டியவள் 

அவளது 

மூக்கையும் முலையையும் 

அரிந்தது 

ராமநீதி.

உணவை யாசிப்பவளைவிட  

பரிதாபத்திற்குறியவளல்லவா 

காமத்தை யாசிப்பவள் ?

அவளை 

ஏளனம்செய்யலாமா?

அவளை 

துன்புறுத்தலாமா? 


நிபந்தனையற்ற ஆனந்தமெனில்  

அச்சம்தான் இல்லையா 

உங்களுக்கு.

மனிதர் யாவரும் 

நிறைவறியாதோர்! 


பொறாமையல்ல  

பரிதாபம்தான் எனக்கு 

சீதையிடம்.

மண்ணில் பிறந்து 

என்னவாகப்போகிறோமென 

அறியாத கனவனின் நிழலாய் 

தலைதாழ்த்தி நடந்து  

கல்லிலும் முள்ளிலும் 

இளமையெல்லாம் அலைந்து 

கனவனின் சகோதரனே  

தன்மேல் ஆசைகொண்டானென 

ஆசைக்கொள்ள மட்டுமேயான  

சிறிய உலகில் 

ஒரு வாழ்வு.

கர்ப்பிணியான போதும்

அனாதையாக   

கனவன் ஆண்ட தேசமே  

புறந்தள்ள 

கொண்டாட்டங்கள் 

முன்னேறிச்செல்வதைக் கண்டுதானே  

காட்டில் கழிந்தாள்.


காரணமற்ற காத்திருப்பின் 

வாழ்நாள் உரிமையாளர்தான்   

மனிதகுலப் பெண்கள் 


சீதை தன் 

வாழ்நாளெல்லாம் காத்திருந்தாள்.


தெரியுமா,

ராவணராம யுத்தம் நடந்தது 

சூர்ப்பனகைக்கு வேண்டித்தான் 

சிதைக்காக அல்ல. 

சீதையை அபகரித்தது 

ஒரு போர்தந்திரம் மாத்திரமே 

அது ஒரு துவக்கம் அவ்வளவே.

எனக்காக என் வம்சம் 

இல்லமலாகும் வரை போரிட்டனர் 

கடைசி ஆள் வரை 

எனக்காக 

ரத்தம் சொரிந்தனர்  


ஒருவன் கூட 

என்னப் பழிக்கவில்லை.


ஆம்

ஆசை 

ஒரு குற்றமல்ல.

Wednesday, March 6, 2013

எப்போதும் - கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

எவரும்
எப்போதும்
அவர்களேயல்ல.

குறிவைக்கும்
ஒற்றைக்கண்ணன்
ஊனமுற்றவனல்ல.

உறங்கும்போதும்
எண்ணும்போதும்
விழியிழந்தவன்
விழியிழந்தவனல்ல.

திருடன்
தன்வீட்டில் திருடனல்ல.

யாரறிவார்
உண்மையில் இப்போது இருப்பதை விட
பெரிய உலகில் இருந்துகொண்டிருக்கலாம் நாம்.

யாரறிவார்
உண்மையில் இப்போது இருப்பதை விட
சிறிய உலகில் இருந்துகொண்டிருக்கலாம் நாம்.

- கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

குடை - கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

எதிர்பாராமல் பெய்தஒரு பெருமழையில்
அப்போது மட்டுமே மனிதர் கண்ணில் படக்கூடிய
அப்போது மட்டுமே உசிதமென்று தோன்றக்கூடிய
கடற்கரைப் பாதையோரத்து ஓலைக்கூரைக்குக் கீழே
சேர்ந்து நிற்கையில் அறிமுகம் கொண்டோம்

கனத்து பெய்யும் மழையில்
அதிபுராதனமான ஓர் அபயத்தின் நம்பிக்கையில்
எங்களுக்கு எங்களைப் பிடித்துப் போயிற்று.
சேர்ந்து வாழ முடிவெடுத்தோம்.
ஒரே போலத் தோன்றும் இருகுழந்தைகளுக்கு
பெற்றோரானோம்.

சமீபத்தில் ஓர் இரவில்
தூங்கிவிட்டாள் என்று தோன்றியபோது
அவளது கரத்தை எடுத்து மெல்ல கீழே வைத்தேன்
அவள் கேட்டாள்
அந்த மழை அரைமணிநேரம் மட்டுமே பெய்ததா என்ன?

- கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

Thursday, January 31, 2013

உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால் - கமல்ஹாசன்


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.

எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,
எவ்வழி எனத் தெரியாமலே 
எமை நடத்திச் செல்லப் பணித்தோம் உன்னை.

இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.
அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. 
வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிது

இவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்
பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்

ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.
அப்போது தென்படுமே
வெவ்வேறு பாதைகள்!
அவற்றில், எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?
எமக்கும் தெரியாது உனக்கும் தெரியாது.

நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம், விபத்தல்ல.
யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,

யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும், உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.

தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.

நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,
இது எமது நாயகம்.

இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;
மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.

- கமல்ஹாசன்

Monday, October 8, 2012

வீழும் கணம் - மனுஷ்ய புத்திரன்

வீழும் கணம் - மனுஷ்ய புத்திரன்

பந்தயத்தின்  சவால்களுக்கு
பயப்படவே இல்லை

எதிர்கொண்டு நிற்பதற்கான சக்தியில்
ஒரு குறை இல்லை

இலக்கை அடைய
இன்னும் ஓரடி போதும்
என்றும் அவனுக்குத் தெரியும்

யார் யாரிடமெல்லாம் போய்
போட்டியிட வேண்டியிருக்கிறது
என்று ஒரு கணம் நினைத்தான்
ஆயுதங்களோடு
அப்படியே மனம் முறிந்து வீழ்கிறான்

- மனுஷ்ய புத்திரன்