Showing posts with label பழந்தமிழ் இலக்கியம். Show all posts
Showing posts with label பழந்தமிழ் இலக்கியம். Show all posts

Friday, November 11, 2011

கம்பர் பாடல் - சுஜாதா பொழிப்புரை


கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே !

சுஜாதாவின் பொழிப்புரை:

         எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, அழித்து முடிவிலாத விளையாட்டுகளை உடைய தலைவருக்கே நாங்கள் சரணம்! 

சுஜாதாவின் சென்னைத்தமிழ்பொழிப்புரை:

நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே!


Wednesday, November 2, 2011

நினைமின் மனனே - பட்டினத்தார்

நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க!

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன,

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை,

இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள்,

பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி

சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை

ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு

முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!

சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!

Monday, October 31, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 6

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 6

136. குறிஞ்சி - தலைவன் கூற்று - மிளைபெருங் கந்தனார்

 காமம் காமம் என்ப; காமம்
 அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
 கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
 குளகு மென்று ஆள் மதம் போலப்
 பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.

 சுஜாதா: தழை தின்ற யானை

  காமம் காமம் என்கிறார்கள்
  காமம் வருத்தமில்லை; நோயில்லை;
  குறைவதில்ல; தணிவதில்லை.
  தழை தின்ற யானையின்
  மதம் போல
  பார்ப்பவர் பார்த்தால்
  அது வெளிப்படும்.

138. குறிஞ்சி - தோழி கூற்று - கொல்லன் அழிசி

 கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
 எம் இல் அயலது ஏழில் உம்பர்,
 மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
 அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
 மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

 சுஜாதா: பூ உதிரும் ஓசை

  ஊரே தூங்கியும்
  நான் தூங்கவில்லை.
  எங்கள் வீட்டுக்கு வெளியே
  மயிலின் காலடி போன்ற இலைகள் கொண்ட
  நொச்சியின் கொம்பிலிருந்து
  மலர்கள் உதிர்வதுகூடக்
  கேட்கிறது.

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

117. நெய்தல் - தோழி கூற்று - குன்றியனார்

 மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
 பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
 கண்டல் வேர் அளைச் செலீஇயர் அண்டர்
 கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
 வாராது அமையினும் அமைக!
 சிறியவும் உள ஈண்டு விளைஞர் கைவளையே.

 சுஜாதா: நழுவாத சிறிய வளையல்

  மழைக்காலத்து ஆம்பல் போன்ற
  கொக்கின் பார்வைக்கு அஞ்சிய
  ஈர நண்டு
  இடையரின் கயிறை அறுத்துச் செல்லும்
  எருதைப் போல விரைந்து செல்லும்
  துறையைச் சேர்ந்தவன்
  வராவிட்டாலும் என்ன?
  வளையல்காரரிடம்
  சிறிய வளையல்களும் உள்ளன.
 
130. பாலை - தோழி கூற்று - வெள்ளிவீதியார்

 நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
 விலங்கு இரு முநீந்ர் காலின் செல்லார்
 நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
 குடிமுறை குடிமுறை தேரின்,
 கெடுநரும் உளரோ நம் காதலோரே.

 சுஜாதா: எப்படித் தப்புவார்?

  பூமியைத் தோண்டி புகுந்துகொள்ள முடியாது
  வானத்தில் ஏற முடியாது
  கடல்மேல் நடந்து செல்ல முடியாது
  நாடு நாடாக, ஊர் ஊராக,
  வீடு வீடாகத் தேடினால்
  அகப்படாமல் தப்பிவிடுவாரா
  என் காதலர்?

131. பாலை - தலைவன் கூற்று - ஒரேழுவனார்

 ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
 பேர் அமர்க கண்ணி இருந்த ஊரே
 நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
 ஈரம பட்ட செவ்விப் பைம் புனத்து
 ஓர் ஏர் உழவன் போலப்
 பேரு விதுப்பு உற்றன்றால் நோகா யானே.

 சுஜாதா: பெரிய வயல், ஒரே ஒரு ஏர்

  அசைகின்ற மூங்கில் போன்ற தோள்கள்
  சண்டையிடும் கண்கள்
  கொண்ட காதலி
  வெகு தூரத்தில் இருக்கின்றாள்.
  பசுமையான அகன்ற வயல் இருந்தும்
  ஒரே ஒரு ஏருள்ள உழவன் போல
  அவசரத்தில் தவிக்கின்றேன்.

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

58. குறிஞ்சி - தலைவன் கூற்று - வெள்ளிவீதியார்

 இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
 நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
 ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்,
 கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
 வெண்ணெய் உணங்கல் போலப்
 பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!

 சுஜாதா: கண்ணால் காக்கும் வெண்ணை.

  நண்பா! திட்டுகிறாய்
  என் நோயை உன்னால்
  நிறுத்த முடிந்தால் நல்லது.
  வெயில் காயும் பாறை மேல்
  கையில்லாத ஊமை
  கண்ணால் காப்பற்ற வேண்டிய
  வெண்ணை போல
  உருகும் நோய் இது,
  தவிக்க முடியாது.
 
95. குறிஞ்சி - தலைவன் கூற்று - கபிலர்

 மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
 கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
 சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
 நீர் ஓரன்ன சாயல்
 தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே

 சுஜாதா: நீரும் நெருப்பும்

  நண்பா!
  மலையருவி பாறைகளில் வெடிக்கும்
  சிற்றூரின் தலைவனின் மகளின்
  நீர்போன்ற மென்மை
  நெருப்பைப் போன்ற என்
  வைராக்கியதைக்
  கெடுகிறது.

112. குறிஞ்சி - தலைவி கூற்று - ஆலந்தூர் கிழார்

 கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
 எள் அற விடினே உள்ளது நாணே
 பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
 நாருடை ஒசியல் அற்றே
 கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே

 சுஜாதா: யானை முறித்த கிளை

  வதந்திக்கு அஞ்சினால்
  ஆசை குறைந்து விடும்.
  அஞ்சாவிட்டால்
  வெட்கம் மட்டுமே மிஞ்சும்
  யானை முறித்த பின்
  நிலத்தில் விழாமல்
  ஒடிந்த கிளையைப் போன்றது
  பார் தோழி, அவர் சுகித்த
  என் நிலைமை.

Thursday, October 20, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

41. பாலை - தலைவி கூற்று - அணிலாடு முன்றிலார்

 காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
 சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
 அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
 மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற்
 புலப்பில் போலப் புல்லென்று
 அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே

 சுஜாதா: அணில் விளையாடும் முற்றம்

  காதலர் அருகில் இருக்கும் போது
  பெரிதாக விழா கொண்டாடும் ஊரைப்போல் மகிழ்வேன்.
  மக்கள் விலகிச்சென்ற சிற்றூரில்
  அணில் நடமாடும் முற்றம் போல
  உணர்கிறேன்
  அவர் விலகிச் சென்ற போது.

46. மருதம் -  தலைவி கொற்று - மாமிலாடனார்

 ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
 கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
 முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
 எருவின் நுண் தாது குடைவன ஆடி
 இல் இறைப் பள்ளித் தம பிள்ளையோடு வதியும்
 புன்கண் மாலையும் புலம்பும்
 இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே.

 சுஜாதா: தனிமையின் நிறம் சாம்பல்

  ஆம்பல் பூவின் சாம்பல் நிறத்தில்
  சிறகுடைய வீட்டுக்க் குருவி
  தானியங்களைப் பொறுக்கிச் சேர்த்து
  தன் குஞ்சுகளோடு விளையாடும்
  மாலை நேரமும் தனிமையும்
  அவர் சென்ற ஊரில்
  இல்லையோ?

58 குறிஞ்சி - தலைவி கூற்று - மீநெறிதூண்டிலார்

 யானே ஈண்டையேனே என் நலனே,
 ஏனர் காவலர் கவண் ஒழி வெரீஇக்
 கான யானை கை விடு பசுங் கழை
 மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
 கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே

 சுஜாதா: விலகிய வேகம்

  நான் இங்கே இருக்கின்றேன்
  என் நிலைமை
  கவண்கல் வீசுபவர் ஒலி கேட்டு
  பயந்து யானை கைவிடும்
  மூங்கில் போல;
  மீனகப்பட்ட தூண்டில் போல
  விரைவாக அவனுடன்
  பழகிய நாட்கள் கழிந்தன

Tuesday, October 18, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1 - யும் படியுங்களேன்.


28. பாலை - தலைவி கூற்று - ஔவையார்

 முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
 ஓரேன், யானும் ஊர் பெற்றி மேலிட்டு,
 'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன் கொல்
 அலமரல் அசைவளி அலைப்ப, என்
 உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே

 சுஜாதா: என்னத்தைச் செய்ய

  முட்டிக்கொள்வேனா!
  என்னை நானே தாக்கிக்கொள்வேனா!
  ஆ ஊ என்று அலறவா?
  மெல்லிய காற்று அசைக்கும்
  என் நோய் அறியாமல்
  தூங்கிக்கொண்டிருக்கும்
  இந்த ஊரை என்ன செய்ய?

37. பாலை - தோழி கூற்று - பாலை பாடிய பெருங்கடுங்கோ

 நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
 பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
 மென் சினை யாஅம் பொளிக்கும்
 அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே.

 சுஜாதா: மனம் மாறிவிடலாம்

  உன்மேல் நிறைய ஆசை உள்ளவர்
  பெண் யானையின் பசியை நீக்க
  ஆன் யானை மரப்பட்டையை உரித்துக்கொடுக்கும்
  காட்சியை வழியில் பார்த்தால்
  அவர் திரும்பி வந்துவிடலாம்
  என் அன்புத் தோழியே!

40. குறிஞ்சி - தலைவன் கூற்று - செம்புலப்பெயநீரார்

 யாயும் ஞாயும் யார் ஆகியரோ
 எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
 யானும் நீயும் எவ் வழி அறிதும்
 செம் புலப் பெயல் நீர் போல
 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

 சுஜாதா: செம்மண்ணில் கலந்த நீர்

  என் தாயும் உன் தாயும் யார் யாரோ
  என் தந்தையும் உன் தந்தையும்
  எப்படி உறவினர்?
  நானும் நீயும் எப்படி அறிந்தோம்?
  செம்மண்ணில் மழைநீர் போல்
  அன்பு நெஞ்சங்கள் கலந்து விட்டனவே!

http://bodhai.blogspot.com/2011/10/blog-post_17.html 

Monday, October 17, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

எனக்குப் பிடித்த சில குறுந்தொகைப் பாடல்கள். "401 காதல் கவிதைகள் - குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்." என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய நூலிலிருந்து.

சுஜாதா பரிந்துரைப்பது போல திணை துறை, சொன்னவர் போன்றவற்றை விட சொல்லப்பட்ட கருத்துக்களில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

வார்த்தைக்கு வார்த்தை உரை இல்லை; மூலத்தின் எளிய வடிவம். தர வரிசையில் இல்லை, படிக்கப் படிக்க வலையேற்றும் எண்ணம்.

இன்றைக்கும் பொருந்தும் சூழ்நிலைகளும், மனித மனங்களும், அவற்றின் எண்ண வெளிப்பாடுகளும் பீறிடும் இந்த அபாரமான கவிதைகளை ரசிக்க முதலில் தேவை ஆர்வம்; பிறகு கொஞ்சம் பொறுமை.

முதல் வாசிப்பில் புரியாமல் இருக்கலாம். இன்னொரு முறை படிக்க வேண்டும். எளிய வடிவத்தில் கவிதையின் கருத்தை பிடித்த பின், மூலத்தின் சொற்களைக் கவனிக்கலாம்.

புரியாவிட்டாலும் கவலை இல்லை, நேரம் வரும் போது தானாக புரியும். எனக்கு அப்படித்தான். இரண்டு வருடத்திற்கு முன் சாதரணமாக கடந்து சென்ற பாடல் இப்போது மிகவும் பிடிக்கிறது; அதனால் தான் சொல்கிறேன், நேரம் வரும் போது தானாக புரியும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் படிக்க வேண்டியது மட்டும் தான். படிப்போம் வாருங்கள்...

14. குறிஞ்சி - தலைவன் கூற்று - தொல் கபிலர்

 அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
 வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அறிவையைப்
 பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
 அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
 நல்லோள் கணவன் இவன் எனப்
 பல்லோர் கூற, யாஅம் நாணுக சிறிதே.

 சுஜாதா: வெட்கப்படுகிறேன்

  சிவந்த நாக்கு, பயப்படும்படியான
  அழகான சிறிய பற்கள்
  குறைந்த பேச்சுள்ள இந்தப் பெண்ணை
  நான் அடைந்தபோது,
  இந்த ஊரே என்னை
  இந்த நல்லவன்தான் இவள் கணவன் என்று
  சொல்லும்போது
  கொஞ்சம் வெட்கப்படுவேன்.
----------------------------------------------------------------------------------------------------

20. பாலை - தலைவி கூற்று - கோப்பெருஞ்சோழன்

 அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
 பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
 உரவோர் உரவோர் ஆக
 மடவம் ஆக மடந்தை நாமே

 சுஜாதா: அப்படியே இருக்கட்டும்

  அருளும் அன்பும் துறந்து
  துணையைப் பிரிந்து
  செல்வத்தைத் தேடிப்
  பிரிபவர்கள்
  கெட்டிக்காரர்கள் என்றால்
  கெட்டிக்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருக்கட்டும்!
  நம்போன்ற பெண்கள் முட்டாள்களாக இருக்கட்டும்!
----------------------------------------------------------------------------------------------------

27. பாலை - தலைவி கூற்று - கொல்லன் அழிசி

 கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
 நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு,
 எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
 பசலை உணீஇயர் வேண்டும்
 திதலை அல்குல் என் மாமைக் கவினே

 சுஜாதா: யாருக்கும் பயனில்லை

  கன்றும் உண்ணாமல் கறக்கவும் கறக்காமல்
  நிலத்தில் வழியும் பசுவின் பால் போல
  எனக்கும் இல்லாமல்
  என் தலைவனுக்கும் உதவாமல்
  என் அழகு வீணாகிறது