Wednesday, November 30, 2011

திருக்குறள் - கள் - சுஜாதா

கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் "கள்" சேர்த்துக் கொள்கிறோம். (உ-ம்) பறவை - பறவைகள், நூல் - நூல்கள், விலங்கு - விலங்குகள். ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன் ?

சுஜாதா பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை

-  சுஜாதா கேள்வி பதில்கள் , பாகம் 1, உயிர்மை பதிப்பகம் வெளியீடு

Friday, November 25, 2011

ஓரிடம் - மனுஷ்ய புத்திரன்

ஓரிடம்

முன்பொரு நாள் நல்ல இருட்டில்
கள்வனைப்போல வந்தவீட்டிற்கு
இன்று நான்
நல்ல வெளிச்சத்தில்
விருந்தாளியாக வருகிறேன்

ஒரு புதிய இடத்திற்குப்
பழகுவதைவிட குழப்பமானது
ஒரு பழைய இடத்தில்
புதிய இடம்போல பழகுவது

அந்தப் படிக்கட்டுகளில்
எத்தனை படி இருக்கிறது என்று
எனக்குத் தெரியும் என்ற போதும்
நான் அதை மறுபடி எண்ணுகிறேன்
ஒன்று குறைவாகவோ
ஒன்று கூடுதலாகவோ இருக்கிறது

புத்தக அலமாரியில்
நான் எந்தப் புத்தகத்தை
எடுத்துப் பிரித்துவிட்டு
எப்படி வைத்தேனோ
அது அதே இடத்தில்
அப்படியே இருக்கிறது

ஒரு விசித்திரமான
கலைவேலைப்பாடுடைய திரைச்சீலையை
எங்கே வாங்கினீர்கள் என்று
நான் அதை அப்போதுதான் பார்ப்பதுபோல கேட்கும்போது
அந்தத் திரைச் சீலை
தனக்குத் தானே ஒரு முறை அசைகிறது

இடது புறம்
கடைசி அறையின் ஜன்னலின் வழியாக
ஆகாயத்தின் விசித்திரமான கோணம்
ஒன்றைக் கண்டேன் என்று சொல்ல விரும்பினேன்
இந்தக்கோணம் இப்போதும் அங்குதான்
இருக்கிறதா என்று ஒரு கணம் பார்க்க விரும்பினேன்

நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன்
குளிர்ந்த தண்ணீரால் முகத்தை நனைத்துக்கொள்கிறேன்
‘இங்கே தண்ணீரில் உப்பு அதிகம்’ என்று சொல்லப்படுகிறது
அதை நான் அறிவேன்
அந்த உப்பு எவ்வளவு அடர்த்தியானது என்பதை
அது எவ்வாறு என்னை சாரமாக்கியது என்பதை
அதை ஒருவரால் ஒருபோதும் கடக்க முடியாது என்பதை

அன்று என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த
ஆர்கிட் செடி காணாமல் போயிருந்தது
நான் அதை அறிய முடியுமா
ஒரு ஆர்கிட் செடியை நாம் ஏன் இழக்கிறோம் என்பதை
அவை ஏன் நம் சீதோஷ்ண நிலைகளைத் தாக்குப்பிடிப்பதில்லை என்பதை
நான் அதை ஒருபோதும் அறிய முடியாது
என்னைப் பொறுத்தவரை
அந்த செடி எப்போதுமே
என்னுடைய உலகில் இருந்திராத ஒன்று

‘உங்களுடைய காபி சுவையாக இருக்கிறது’
என்றபடியே காலிக் கோப்பையை
மேசையின் மேல் வைக்கிறேன்
இந்த உலகில்
இரண்டாம் முறையும் அதே போல சுவையுடைய காபி
ஒரு முறைகூட
எங்குமே தயாரிக்கப்படவில்லை என்பது
நமக்குத் தெரியும்
இருந்தும் நான் அதைச் சொல்கிறேன்

நான் விடைபெறும் முன்
அந்த உயரமான நிலைக் கண்ணாடியில்
ஒரு முறை என்னைப் பார்த்துக் கொள்ள விரும்பினேன்
அது என்னைப் பதட்டமடைய வைக்கிறது
வேறொரு நாளில் அது தேக்கி வைத்த
எனது பிம்பத்தை ஒரு கணம்
தவறுதலாகக் காட்டி மறைக்கிறது

அன்பே
எந்த அறையின் சுவர்களில்
உன்னைச் சாய்த்து முத்தமிட்டேனோ
அந்தச் சுவரின் எரியும் வண்ணத்தில்
சாய்ந்து நிற்கிறேன்
அவ்வளவு நிராசையுடன்
அவ்வளவு தனிமையுடன்
மனிதர்களிடம் நடிப்பதுபோல
அவ்வளவு எளிதாய் இல்லை
இடங்களிடம் நடிப்பது.

 - மனுஷ்ய புத்திரன்

Tuesday, November 22, 2011

நான் ஒரு முட்டாளுங்க - சந்திரபாபு

நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க

கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
ஏ..ஏ…ஏ.. கைதே …டாய்..
கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீச் பீசா கீசாங்க பேஜாரா பூட்டுதுங்க..
நான் ஒரு முட்டாளுங்க

கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லம் நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க

நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன் என்னாங்க.
நான் ஒரு முட்டாளுங்க…

- சந்திரபாபு

புத்தியுள்ள மனிதனெல்லாம் - கண்ணதாசன்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கும் சொந்தம் எல்லம் துன்பம்.
 
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பாத்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவாள் யாரை பாத்து அணைப்பாள்

 - கண்ணதாசன்

ஓராயிரம் பார்வையிலே - கண்ணதாசன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே)

Friday, November 11, 2011

கம்பர் பாடல் - சுஜாதா பொழிப்புரை


கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே !

சுஜாதாவின் பொழிப்புரை:

         எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, அழித்து முடிவிலாத விளையாட்டுகளை உடைய தலைவருக்கே நாங்கள் சரணம்! 

சுஜாதாவின் சென்னைத்தமிழ்பொழிப்புரை:

நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே!


மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா - கண்ணதாசன்

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்;
மானிடர் ஆன்மா மரணமெய்தாது,
மறுபடிப் பிறந்திருக்கும்;

மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!
வீரத்தில் அதுவும் ஒன்று;
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,
வெந்து தான் தீரும் ஓர் நாள்.

என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,
எனதென்றும் அறிந்து கொண்டாய்;
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்

மன்னரும் நானே, மக்களும் நானே,
மரம் செடி கொடியும் நானே;
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;
துணிந்து நில் தர்மம் வாழ.

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.

கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;
கண்ணனே கொலை செய்கின்றான்.
காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!
இக்களமெலாம் சிவக்க வாழ்க!

பரித்ராணாய சாதூனாம்,
விநாசாய சதுஷ்க்ருதாம்;
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,
சம்பவாமி யுகே யுகே.

- கண்ணதாசன்

Wednesday, November 2, 2011

நினைமின் மனனே - பட்டினத்தார்

நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க!

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன,

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை,

இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள்,

பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி

சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை

ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு

முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!

சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!