Wednesday, October 5, 2011

மேசை நடராசர் - ஞானக்கூத்தன்

மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்கள் அல்ல. கிங்கரர் அல்ல.

எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கறுத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப் படுத்துக் கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுது பார்க்கப்பட
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி, மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்

ஆனால் நடராசர்
ஆடிக் கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்

எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்

உள்ளங்கைக்குள் ஏந்தக்கூடிய முட்டை - கல்யாண்ஜி

உள்ளங்கைக்குள் ஏந்தக்கூடிய முட்டை
அளவுக்கு அழகானது உண்மை.
நான் கை நழுவ விட்டிருக்கிறேன்.
அதைப் பொறுக்கி எடுத்ததும் நான்தான் எனினும்
மஞ்சட் கருவும் வெள்ளைக் கருவும்
சிந்திச் சிதறி
உண்மையின் அருவருத்த முடைநாற்றம்
தோடுகள் மட்டும் இன்னும் அழகாக,
நீங்கள் உங்கள் முட்டைகளைச்
சிதறவிடுவதில்லை.
உயிரும் சிறகும் நிரம்பிய
ஒருபறவையைப் பறக்க விட்டிருக்கிறீர்கள்
அதிலிருந்து,
ஏற்கனவே வானம் அழகானது.
மேலும் அழகாகி இருக்கிறது அந்தப் பறவையால்

இறந்தவனின் ஆடைகள் - மனுஷ்ய புத்திரன்

இறந்தவனின் ஆடைகளை
எப்படிப் பராமரிப்பதென்றே
தெரியவில்லை

இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்துகொண்டுவிட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகிவிடும்

அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல

தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்

இறந்தவனின் ஆடைகளை
அழித்துவிடலாம்தான்
இறந்தவனைத்
திரும்பத் திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன

இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது
(அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு

அம்மா இல்லாத முதல் ரம்ஜான் - மனுஷ்யபுத்திரன்

அம்மா இல்லாத
முதல் ரம்ஜான்
நன்றாய் நினைவிருக்கிறது
அம்மாவைப் போலவே

எல்லா வீடுகளுக்கும்
வெள்ளையடித்த சுவர்களையும்
எங்களுக்கு ஞானத்தையும்
கொண்டு வந்த ரம்ஜான்

அதிகாலையில்
குளிக்க எழுப்பிவிடும்
அம்மாவை எழுப்பிவிட
அன்று யாருமில்லை

தூங்காத இரவை
சூரியன் எடுத்துச் சென்றபின்
எழுந்தோம்

உலகம் முழுவதற்கும் போதுமான
நிராதரவும் ஏழ்மையும்
எங்கள் வீட்டில் கப்பிக்கிடந்தது

பிறரது
இரக்கத்தின் கனத்தைப்
பொறுக்கச் சக்தியில்லாத தங்கை
கொடுத்தனுப்பபட்ட பட்சணங்களை
திருப்பியனுப்பிவிட்டு
ஐதிகம் மீறி
எண்ணைய்ச் சட்டி பற்றவைத்தாள்

தந்தை சாப்பிடாமலே
தொழுகைக்குச் சென்றார்
அவரைப் போன்றோரின்
காதல் பற்றி
கவிதைகளில் குறிப்பிடப்படுவதில்லை

சின்னத தம்பியைக்
கட்டாயப்படுத்திப் புத்தாடை அணிவித்தோம்
அம்மா இறந்த இரவில்
இனிமேல் அம்மா வரவே வராதா?
என்றழுத பிள்ளையை
அப்படியே விட்டுவிட முடியாது

ஆண்டுக்கொருமுறை
தெரு எல்லைகள் கடந்து
வீடு வீடாய்ச் செல்லும்
உறவுக்காரப் பெண்கள்
எங்கள் வீட்டிற்குள்
நுழையாமலே கடந்து சென்றனர்

நரம்புகளைத் தூண்டும்
மந்திரங்களின் பேரொலியுடன்
தொழுகை ஊர்வலம்
வீதியில் சென்றது

பாட்டியின் கைகள்
ஏன் அவ்வளவு பயங்கரமாய்
நடுங்கின?

மூலைக்கு மூலை
சாவு சிரித்தது

அம்மாவை
நீலம் பாரித்த முகத்துடன்
மீண்டும் தூக்கிவந்து
கிடத்தியது போலிருந்தது

முந்தைய ரம்ஜானில்
இந்த அளவுக்கு
இல்லாமல் போவோம் என
நினைத்திருப்பாளா?

பண்டிகைகள் கொண்டாடாத
நாத்திகனான நான்
முகத்தை மூடிக்கொண்டு
அழுதேன்

பின்னர்
வேறு ரம்ஜான்கள் வந்தன

அதிகாலைக் குளியல்
வெள்ளையடித்த சுவர்கள்
வீட்டில் கூட்டம்
புத்தாடைகளின் நறுமணம்
அம்மா இடத்தில் அண்ணி

எல்லாமே
எப்படியோ
சரிக்கட்டப்பட்டு
திரும்பிவிடுகிறது

ஆனால்
நானந்த
முதல் ரம்ஜானை
பத்திரமாய் வைத்திருப்பேன்

ஏனெனில் அது
அல்லாவை எதிர்த்து
அம்மாவுக்காக
கொண்டாடப்பட்ட ரம்ஜான்

Tuesday, October 4, 2011

கதவை சுண்டாதே - பசுவய்யா

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியை கட்ட கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
அவர் தொலைபேசி எண் ? என்பாய்
கையால் ஆகாதவன் என என்னைச் சொல்லாமல் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம் சரித்துவிட்டும் போவாய்
ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால் என் கதவைச் சுண்டாதே
தயவு செய்து ...

 - பசுவய்யா