Friday, September 23, 2011

கல்லாலான இதயம் - மனுஷ்ய புத்திரன்

என் சின்னஞ் சிறு மகளுக்கு
இன்றைக்கும்
தன் பள்ளிக்குப் போகும் பாதையை
ஏற்க மனமில்லை

அவளது கேவல்களின் ஓசை
மரங்களில் குடியேறுகிறது
அவளது கண்ணீரின் முத்துக்கள்
வீடெங்கும் சிதறி உருள்கின்றன

இந்த உலகின் நியதிகளின் கையில்
அவளை ஒப்படைத்துவிட்டு
வெகுதூரம் விலகிச் செல்கிறேன்

அவளது நியதியைப் புரிந்துகொள்பவனை
அவள் பரபரத்துத் தேடுகிறாள்
நான் ஒரு கல்லாலான  இதயத்தோடு
அவளிடமிருந்து ஒளிந்துகொள்கிறேன்

ஒரு கல்லாலான இதயம்
பாறையைப் போல கனத்துவிடும்போது
அதை ஒரு வெட்டவெளியில் இறக்கிவைத்துவிட்டு
இளைப்பாறுகையில்தான் பார்த்தேன்
பாறையின் மேல்
அவள் எப்படி
ஒரு இடையறாத மழைத்துளியாக
வந்து பொழிகிறாள் என்பதை

No comments:

Post a Comment