Monday, October 17, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

எனக்குப் பிடித்த சில குறுந்தொகைப் பாடல்கள். "401 காதல் கவிதைகள் - குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்." என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய நூலிலிருந்து.

சுஜாதா பரிந்துரைப்பது போல திணை துறை, சொன்னவர் போன்றவற்றை விட சொல்லப்பட்ட கருத்துக்களில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

வார்த்தைக்கு வார்த்தை உரை இல்லை; மூலத்தின் எளிய வடிவம். தர வரிசையில் இல்லை, படிக்கப் படிக்க வலையேற்றும் எண்ணம்.

இன்றைக்கும் பொருந்தும் சூழ்நிலைகளும், மனித மனங்களும், அவற்றின் எண்ண வெளிப்பாடுகளும் பீறிடும் இந்த அபாரமான கவிதைகளை ரசிக்க முதலில் தேவை ஆர்வம்; பிறகு கொஞ்சம் பொறுமை.

முதல் வாசிப்பில் புரியாமல் இருக்கலாம். இன்னொரு முறை படிக்க வேண்டும். எளிய வடிவத்தில் கவிதையின் கருத்தை பிடித்த பின், மூலத்தின் சொற்களைக் கவனிக்கலாம்.

புரியாவிட்டாலும் கவலை இல்லை, நேரம் வரும் போது தானாக புரியும். எனக்கு அப்படித்தான். இரண்டு வருடத்திற்கு முன் சாதரணமாக கடந்து சென்ற பாடல் இப்போது மிகவும் பிடிக்கிறது; அதனால் தான் சொல்கிறேன், நேரம் வரும் போது தானாக புரியும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் படிக்க வேண்டியது மட்டும் தான். படிப்போம் வாருங்கள்...

14. குறிஞ்சி - தலைவன் கூற்று - தொல் கபிலர்

 அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
 வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அறிவையைப்
 பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
 அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
 நல்லோள் கணவன் இவன் எனப்
 பல்லோர் கூற, யாஅம் நாணுக சிறிதே.

 சுஜாதா: வெட்கப்படுகிறேன்

  சிவந்த நாக்கு, பயப்படும்படியான
  அழகான சிறிய பற்கள்
  குறைந்த பேச்சுள்ள இந்தப் பெண்ணை
  நான் அடைந்தபோது,
  இந்த ஊரே என்னை
  இந்த நல்லவன்தான் இவள் கணவன் என்று
  சொல்லும்போது
  கொஞ்சம் வெட்கப்படுவேன்.
----------------------------------------------------------------------------------------------------

20. பாலை - தலைவி கூற்று - கோப்பெருஞ்சோழன்

 அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
 பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
 உரவோர் உரவோர் ஆக
 மடவம் ஆக மடந்தை நாமே

 சுஜாதா: அப்படியே இருக்கட்டும்

  அருளும் அன்பும் துறந்து
  துணையைப் பிரிந்து
  செல்வத்தைத் தேடிப்
  பிரிபவர்கள்
  கெட்டிக்காரர்கள் என்றால்
  கெட்டிக்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருக்கட்டும்!
  நம்போன்ற பெண்கள் முட்டாள்களாக இருக்கட்டும்!
----------------------------------------------------------------------------------------------------

27. பாலை - தலைவி கூற்று - கொல்லன் அழிசி

 கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
 நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு,
 எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
 பசலை உணீஇயர் வேண்டும்
 திதலை அல்குல் என் மாமைக் கவினே

 சுஜாதா: யாருக்கும் பயனில்லை

  கன்றும் உண்ணாமல் கறக்கவும் கறக்காமல்
  நிலத்தில் வழியும் பசுவின் பால் போல
  எனக்கும் இல்லாமல்
  என் தலைவனுக்கும் உதவாமல்
  என் அழகு வீணாகிறது

No comments:

Post a Comment