Tuesday, October 18, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1 - யும் படியுங்களேன்.


28. பாலை - தலைவி கூற்று - ஔவையார்

 முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
 ஓரேன், யானும் ஊர் பெற்றி மேலிட்டு,
 'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன் கொல்
 அலமரல் அசைவளி அலைப்ப, என்
 உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே

 சுஜாதா: என்னத்தைச் செய்ய

  முட்டிக்கொள்வேனா!
  என்னை நானே தாக்கிக்கொள்வேனா!
  ஆ ஊ என்று அலறவா?
  மெல்லிய காற்று அசைக்கும்
  என் நோய் அறியாமல்
  தூங்கிக்கொண்டிருக்கும்
  இந்த ஊரை என்ன செய்ய?

37. பாலை - தோழி கூற்று - பாலை பாடிய பெருங்கடுங்கோ

 நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
 பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
 மென் சினை யாஅம் பொளிக்கும்
 அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே.

 சுஜாதா: மனம் மாறிவிடலாம்

  உன்மேல் நிறைய ஆசை உள்ளவர்
  பெண் யானையின் பசியை நீக்க
  ஆன் யானை மரப்பட்டையை உரித்துக்கொடுக்கும்
  காட்சியை வழியில் பார்த்தால்
  அவர் திரும்பி வந்துவிடலாம்
  என் அன்புத் தோழியே!

40. குறிஞ்சி - தலைவன் கூற்று - செம்புலப்பெயநீரார்

 யாயும் ஞாயும் யார் ஆகியரோ
 எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
 யானும் நீயும் எவ் வழி அறிதும்
 செம் புலப் பெயல் நீர் போல
 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

 சுஜாதா: செம்மண்ணில் கலந்த நீர்

  என் தாயும் உன் தாயும் யார் யாரோ
  என் தந்தையும் உன் தந்தையும்
  எப்படி உறவினர்?
  நானும் நீயும் எப்படி அறிந்தோம்?
  செம்மண்ணில் மழைநீர் போல்
  அன்பு நெஞ்சங்கள் கலந்து விட்டனவே!

http://bodhai.blogspot.com/2011/10/blog-post_17.html 

No comments:

Post a Comment