Tuesday, October 4, 2011

கல்யாண்ஜி கவிதைகள்

பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.

திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்

அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
'கோலம் நல்லா வந்த '
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.

புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ
விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.

உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது,
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.


- கல்யாண்ஜி, 'அந்நியமற்ற நதி' தொகுப்பிலிருந்து 

No comments:

Post a Comment