Thursday, October 20, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

41. பாலை - தலைவி கூற்று - அணிலாடு முன்றிலார்

 காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
 சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
 அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
 மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற்
 புலப்பில் போலப் புல்லென்று
 அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே

 சுஜாதா: அணில் விளையாடும் முற்றம்

  காதலர் அருகில் இருக்கும் போது
  பெரிதாக விழா கொண்டாடும் ஊரைப்போல் மகிழ்வேன்.
  மக்கள் விலகிச்சென்ற சிற்றூரில்
  அணில் நடமாடும் முற்றம் போல
  உணர்கிறேன்
  அவர் விலகிச் சென்ற போது.

46. மருதம் -  தலைவி கொற்று - மாமிலாடனார்

 ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
 கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
 முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
 எருவின் நுண் தாது குடைவன ஆடி
 இல் இறைப் பள்ளித் தம பிள்ளையோடு வதியும்
 புன்கண் மாலையும் புலம்பும்
 இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே.

 சுஜாதா: தனிமையின் நிறம் சாம்பல்

  ஆம்பல் பூவின் சாம்பல் நிறத்தில்
  சிறகுடைய வீட்டுக்க் குருவி
  தானியங்களைப் பொறுக்கிச் சேர்த்து
  தன் குஞ்சுகளோடு விளையாடும்
  மாலை நேரமும் தனிமையும்
  அவர் சென்ற ஊரில்
  இல்லையோ?

58 குறிஞ்சி - தலைவி கூற்று - மீநெறிதூண்டிலார்

 யானே ஈண்டையேனே என் நலனே,
 ஏனர் காவலர் கவண் ஒழி வெரீஇக்
 கான யானை கை விடு பசுங் கழை
 மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
 கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே

 சுஜாதா: விலகிய வேகம்

  நான் இங்கே இருக்கின்றேன்
  என் நிலைமை
  கவண்கல் வீசுபவர் ஒலி கேட்டு
  பயந்து யானை கைவிடும்
  மூங்கில் போல;
  மீனகப்பட்ட தூண்டில் போல
  விரைவாக அவனுடன்
  பழகிய நாட்கள் கழிந்தன

No comments:

Post a Comment