Wednesday, October 12, 2011

அருகாமையில் இருக்கக் கூடும் - மனுஷ்யபுத்திரன்

இன்றும் தேவைப்படுகின்றன
ஏராளமான உதவிகள்
இருக்கக் கூடும் நீ
கண்ணீரை ரகசியமாகத்
துடைத்துக் கொள்ளும்
யாரோ ஒருவருக்கு
வெகு அருகாமையில்

ஒரு குழந்தைக்கு
ஷூ வின் கயிறைக் கட்டுவதில்

மழையில் நின்றுவிட்ட
ஒரு ஸ்கூட்டரை இயக்குவதில்

தப்பி வந்த கைதி ஒருவனின்
கை விலங்கை உடைப்பதில்

ஒரு சிறு பெண்ணின்
ரகசிய கர்ப்பத்தைக் கலைப்பதில்

ஒரு குருடனுக்கு 
சரியாக வழி காட்டுவதில்

நிற்க முடியாத ஒருவருக்கு
பேருந்தில் உன் இருக்கையைத் தருவதில்

யாரோ ஒருவரின்
கழிவறையை சுத்தம் செய்வதில்

கீழே விழுந்துவிட்ட ஒரு பறவைக் குஞ்சை
அதன் கூட்டுக்குத் தருவதில்

வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதப்பட்ட
காதல் கடிதங்களைத் திருப்பிக் கொடுத்துவிடுவதில்

இறந்துகொண்டிருப்பவருக்கு
இல்லை நீங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்
என்று பொய் சொல்வதில்

நிராதரவான ஒரு குரலுக்கு
வெறுமனே செவி சாய்ப்பதில்

பேச்சு வராத ஒருவரின்
சைகைகளைப் புரிந்துகொள்வதில்

பார்த்த ஒன்றைப்
பார்க்கவே இல்லை என்று சொல்வதில்

கேட்ட ஒன்றைக்
கேட்கவே இல்லை என்று சொல்வதில்

தேவைப்படும் பெரும்பாலான உதவிகள்
கேட்கப்படுவதே இல்லை
நாம்தான் அவற்றைப்
புரிந்துகொள்ள வேண்டியவர்களாகிறோம்


உனக்கு எவ்வளவோ நேரமிருக்கிறது
ஒரு சிறு செயல்
அது உன்னைப் புனிதனாக்குகிறது

எப்போதோ தேவைப்படலாம்
ஒரு பெரிய தியாகம்
அது உன்னை
மனிதனாக்கக் கூடும்

No comments:

Post a Comment