Thursday, October 13, 2011

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா

முதலில்,மோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்க்கலாம். சிவஞானபோதம் என்னும் நூல், மோகம் என்பது மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி என்கிறது. கம்பர் மோகமெங்குமுளவாக என்று திகைப்பு என்கிற அர்த்தத்தில் சொல்கிறார்.


மோகம் பழைய வார்த்தை.மெள்ள மெள்ள இந்தச் சொல் மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு என்று பாரதி திணறுமளவுக்கு மனதை ஆக்கிரமிக்கும் உணர்ச்சிக்கு, ஆங்கிலத்தில் Obsession என்று சொல்கிறார்களே… அதற்கு ஈடாகப் பயன்படும் வார்த்தையாகி விட்டது. இந்தக் கோணத்தில் தான் நாம் வெளிநாட்டு மோகத்தைப் பார்க்கப் போகிறோம்.


வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று - வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் (மேட்ச்பாக்ஸ்கூட ஃபாரின்தாங்க எங்க வீட்ல…). இரண்டு -வெளி¢நாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகித்து, அதைக் - குருட்டுத்தனமாகக் கடைப்பிடிப்பது. (ராதாவுக்கு கோக் இல்லைன்னா உயிர் வாழமுடியாது). மூன்றாவது - இடது கையை வெட்டிக் கொடுத்தாவது வெளி¢நாடு சென்றே ஆகவேண்டும் என்கிற மோகம் (சியாட்டில்ல எப்ப மழை பெய்யும்னு சொல்ல முடியாது…).


வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் இருப்பதில் ஓரளவுக்குத் தவறில்லை… வெளிநாட்டில் தயாராகும் சில விற்பனைப் பொருட்கள், அந்த நாடுகளின் நுகர்வோர் கலாசாரத்தின் கடும் போட்டியால் நல்ல தரமுள்ளவையாக இருக்கும்.


உதாரணமாக, அமெரிக்காவில் தயாராகும் ஷேவர்கள் நன்றாக சவரம் செய்யும். ஜப்பான், கொரிய நாட்டு கம்ப்யூட்டர்,வி.சி.ஆர்., எலெக்ட்ரானிக் சமாசாரங்கள் நல்ல தரமுள்ளவையாக இருக்கும்.இவற்றைப் பாராட்டுவதிலோ, பயன்படுத்துவதிலோ - ஏதும் தயக்கமில்லை.ஆனால், அந்தப் பொருட்கள் நமக்குத் தேவையானதாக இருக்க வேண்டும். ஒரு லாப்-டாப்போ, ஒரு மாக்கின்டோஷோ, ஒரு சின்தசைஸரோ, கீ-போர்டோ இல்லாமல் நம்மில் பலரால் உயிர் வாழ முடியும். பர்மாபஜாரில் கிடைக்கிறது என்று சின்தசைஸர்களைக் காசைக் கொட்டி வாங்கி, அதில் ஒரே ஒரு பாட்டை மட்டும் வாசித்துக்கொண் டிருப்பது வீண். அதற்கு உள்நாட்டு ஆர்மோனியம் போதும்.


அதேபோல, நல்ல கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக - இருந்தால் மாக்கின்டோஷ்- கணிப்பொறி வாங்கலாம். அதை வாங்கி வைத்து, லெட்டர் அடிக்கவும் கேம்ஸ்விளையாடவும் பயன்படுத்துவது முட்டாள்தனம். நம் நாட்டில் கிடைக்காத, தரம்வாய்ந்த, விலை குறைந்த வெளி¢நாட்டுப் பொருட்களை, அவற்றுக்குத் தேவையிருக்கும் போது வாங்கலாம். வெளி¢நாடு என்கிற ஒரே காரணத்துக்காக, அவற்றை ஒதுக்கத் தேவையில்லை.



சுதேசிக் கொள்கை, இந்த உலகப் பொதுச் சந்தை காலகட்டத்தில் அர்த்தமற்றது. மேலும், உள்நாட்டிலேயே தயாராகும் எல்லாப் பொருட்களிலும் வெளிநாட்டுத்தொழில் நுட்பமோ, மூலப் பொருளோ இருந்தே தீர்கிறது. வெளிநாட்டுப் பொருளே கூடாது என்று பிடிவாதமாக இருந்தால், வாழை இலையைத் தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது.


உதாரணமாக, ஜப்பானிய நேஷனல் கம்பெனியின் ரைஸ் குக்கர் உலகப் பிரசித்திப் பெற்றது. அதை நிச்சயம் வோல்டேஜ் பார்த்து வாங்கலாம். பிரம்மச்சாரிகளுக்கும் வீட்டில் சமைக்கும் இளம் கணவர்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதம். அதேபோல, டோஸ்ட்டர் போன்ற பொருட்கள் நம் அவசரங்களுக்குப் பயனுள்ளவை. ஆனால், வெளிநாட்டு முத்திரை இருக்கிறது என்பதால் ஷ¨க்கள், செருப்புகள், சிகரெட்டுகள், வாசனை ஷாம்புகள், சோப்புகள் போன்ற கண்டா முண்டா சாமான்களையெல்லாம் வாங்கிப் போடுவதில் அர்த்தமில்லை.


நான் சென்ற ஒரு வீட்டில் கக்கூஸ் காகிதம்கூட ஹாலந்திலிருந்தோ, நியூஸிலாந்திலிருந்தோ கொண்டுவந்தது என்று - பெருமைப்பட்டுக் கொண்டார்கள். முதலில் பேப்பரே எதற்கு என்பது என் கேள்வி. ஃபாரின் விஸ்கிதான் மயக்கம் வராது. ஃபாரின் சிகரெட்டுதான் கான்சர் வராது என்னும் மனப்பான்மை தீங்கானது.


நான் பணிபுரிந்த பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மேலதிகாரி ஒருவருக்கு, லண்டனில் கிடைக்கும் - எரின்மூர் என்னும் புகையிலைதான் பைப்பில் அடைத்துப் பிடிக்க வேண்டும். அதனால், வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இன்ஜினீயரையும் ஒரு டப்பா வாங்கிவரச் சொல்வார். அதனாலேயே அவர் சில சமயங்களில் நடுநிலைமையை இழக்கவேண்டி இருந்தது.


மும்பை விமானநிலையத்தில் ஒரு முறை திரும்பியபோது, கஸ்டம்ஸ் அதிகாரியிடம் ஓர் இளைஞர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து சைக்கிள் ஒன்று கொண்டுவந்திருந்தார் (பபுலுவுக்கு விளையாட!). அப்புறம் ஒரு பெட்டி நிறைய சாக்லெட். கஸ்டம்ஸ் அதிகாரி இன்னும் லஞ்சம் வாங்கத் துவங்காத இளைஞர். ஏன் சார், நம் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு லட்சக்கணக்காக சைக்கிள் ஏற்றுமதி செய்கிறோம். நீங்கள் சைக்கிளை இம்போர்ட் செய்கிறீர்களே… உங்களை என்ன சொல்வது..? என்றார். நீ என்ன அதைக் கேட்பது..? அதற்கான டூட்டி கொடுக்கிறேன். சைக்கிள் என்ன, அண்டர்வேர்கூட என்னுடையது ஃபாரின்தான்… பார்க்கிறாயா..? என்றார் இளைஞர். அதிகாரி பதட்டப்படாமல், ஏறக்குறைய ஒரு மோட்டார் சைக்கிள் விலைக்கு டூட்டி தீட்டினார்! ஒரு ஃபேமிலிக்கு இத்தனை சாக்லெட் அதிகம். இதை நான் அனுமதிக்கப் போவதில்லை… என்று கடுப்பில் தடுத்துவிட்டார். அந்த இளைஞர், தன் குடும்பத்தினர் அனைவரையும் உட்காரவைத்து, அங்கேயே அத்தனை சாக்லெட்டையும் சாப்பிட்டு முடித்தார்! இம்மாதிரியான பகுத்தறிவை மயக்கும் அபத்தங்கள் கொண்ட மோகத்தைத்தான் நான் தவிர்க்க வேண்டும் என்கிறேன்.


அடுத்து,வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகம். இது நமக்கு ஊடகங்களிலிருந்து வருகிறது. ஊடகம் என்ற வார்த்தை சினிமா, டி.வி., செய்தித்தாள் போன்றவற்றுக்குப் பொதுவான, மீடியம் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே… அதற்குத் தமிழ். குறிப்பாக, நம் நகர்ப்புற இளைஞர்கள் இவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.மூத்திரம் போவதற்குக்கூட, ஆங்கிலம் பேசிக்கொள்ளும் ஐ டோண்ட் நோ டமில் யார் வகை. இது ஒரு அபாயகரமான கலாசாரத் தாக்கம்.


அவர்கள் பலரும் சூயிங்கம் மெல்வது, ஜீன்ஸ் அணிவது, இலக்கில்லாமல் சுற்றுவது, மோட்டார் சைக்கிளில் கையில் தோல் பெல்ட், கண்ணில் ரேபான், பின்ஸீட்டில் பெண் அணிந்து டிஸ்கோக்களுக்குப் போவது, அங்கே ஸ்பைஸ் கர்ள்ஸ், மடோனா, பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் போன்ற மேற்கே காலாவதியான பெயர்களை அடிக்கடி பயன்படுத்துவது, டமில் ஃபிலிம்ஸ் யார் பார்ப்பார்கள்..? கர்னாடிக் மியூஸிக் போர் யார்… சுத்திஃபை கடிச்சுஃபை… போன்ற தமிழாங்கில அசிங்கங்களைப் பயன்படுத்துவது…


இம்மாதிரியான மேம்போக்கான பழக்கங்களின் அடித்தளத்தில் சில அபாயங்கள் உள்ளன. பெற்றோரை, பெரியவர்களை மதிக்காமல் ஊர் சுற்றுவது, போதைப் பொருட்களுடன் முதல் பரிச்சயம், படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவது, தம் இயலாமைகளுக்குப் பெற்றோரைக் குற்றம் சொல்வது போன்ற அபாயங்கள். சுவாமி சுகபோதானந்தா நமக்கு நவரசங்களில் பயரசமும் வேண்டும் என்கிறார். ஆரோக்கியமான பயம், healthy fear… குறிப்பாக, மேல்நாட்டுப் பழக்கங்களின்மேல் வேண்டும். இவை நகர்ப்புறப் பழக்கங்கள். சிறு நகரங்களும் கிராமங்களும் அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை. இருந்தும் விரைவிலேயே மேல்நாட்டுப் பழக்கங்கள் அனைத்தும் சாட்டிலைட் மூலம் கிராமப்புறங்களிலும் பரவிவிடும் அபாயம் உண்டு. இதற்குப் பயப்படுங்கள். 

இவற்றுக்கு இரண்டு முகங்கள் உண்டு. அந்த நாடுகளின் சமூக அமைப்பும் - கலாசாரமும் சந்தர்ப்பங்களும் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அவர்கள் சின்ன வயசிலேயே பெற்றோரைப் புறக்கணித்துவிடுவார்கள். சொந்தமாக சம்பாதிப்பார்கள். பதினாலு வயசுக்குள் புணர்ச்சி அனுபவம். இல்லையேல் அது அப்நார்மல். ஒரு குறிப்பிட்ட வயசு வரை திரிந்துவிட்டு சட்டென்று ஒரு நாள் காதுக் கடுக்கனை கழற்றிவிட்டு முடி வெட்டிக்கொண்டு சூட் அணிந்து கொண்டு கம்ப்யூட்டர் படிக்கப் போய்விடுவார்கள். அப்படி நம் நாட்டிலும் இருந்தால் இந்தப் பழக்க வழக்கங்களை ஒரு தற்காலிக உபத்திரவமாக சகித்துக்கொள்ளலாம். அது நம் நாட்டில் நடப்பதில்லை. பெற்றோர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறீர்கள். அவர்கள் ஓவர் டைம் பண்ணி, பி.எஃப். லோன் எடுத்து சம்பாதித்த காசில் நீங்கள் திரிகிறீர்கள்.


அங்கே வேலைக்குப் போக கல்லூரி படிப்பு தேவையில்லை. ஓரளவு சம்பாதிக்கும் வாய்ப்புகள் அங்கு ஏராளம். அதனால் அந்தப் பழக்க வழக்கங்களுக்கான பொறுப்பையும் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். தாமே ஒரு கட்டத்தில் தெளிந்துவிடுகிறார்கள். நம் நாட்டில் இந்தப் பழக்க வழக்கங்கள் அப்பா அம்மா சம்பாதிக்கும் காசில் நடக்கிறது. அதுதான் பெரிய வேறுபாடு.


இன்று சென்னை, பெங்களூர் மாதிரி நகரங்களில் திரியும் அத்தனை இளைஞர்களையும் உற்றுப் பார்க்கும் போது ஒரு ஆட்டு மந்தைத்தனம் தெரிகிறது. இளம் பெண்கள் காலேஜுக்கு கட் அடித்து விட்டு அலைவதைப் பார்க்கிறேன். மார்பு குலுங்க பனியன் போட்டுக் கொண்டு, தொடை தெரிய டிராயர் அணிந்துக்கொண்டு, உடம்பைக் காட்டும் பழக்கம் மனதை பாதிக்காமல் இருக்க நம் சமூகம் அத்தனை பக்குவம் இல்லாதது. மேலும் ஏழை, பணக்கார வேறுபாடுகள் நம்மிடம் மிக அதிகம். இதனால் ஈவ் டீசிங், பெண் பலாத்காரம் போன்ற வன்முறைகள் ஏற்படுகின்றன.


ஜீன்ஸ் போன்றவை ஸ்கூட்டர் மெக்கானிக் வேலைகளுக்கு சரி. மற்றவர்களுக்குத் தேவைதானா என்பதே எனக்குச் சந்தேகம். தேவைதான், அதை வருஷத்துக்கு ஒரு முறை துவைத்து போட்டுக்கொள்வதில் முரட்டு சௌகரியம் இருக்கிறது என்றால் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதை கௌரவம், லீ ஜீன்ஸ்தான் உடம்புக்கு ஆகும், அதுதான் பெருமை என்றெல்லாம் சொல்லாதீர்கள். ரிஷிமூலம் பார்த்து விசாரித்தால் அந்த ஜீன்ஸ் பங்களாதேஷிலோ அல்லது வியட்நாமிலோ செய்யப்பட்டு அமெரிக்கா போய்விட்டு இந்தியா வந்திருக்கும்.
இனி, வெளிநாடு செல்லும் மோகம்.

பெரும்பாலும் இன்ஜினீயரிங் படிக்கும் நகர்ப்புற இளைஞர்களிடம் இந்த மோகம் தலைக்கிறுக்கி ஆடுகிறது (டாக்டர்களை அவர்கள் அதிகம் அனுமதிப்பதில்லை)

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இளைஞர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.

பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

’அன்புடன்…’ வந்த கடிதங்கள்…

விகடனில் அன்புடன் பகுதியில் வெளி¢நாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நான் எழுதிய கடிதம் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறையப் பேர் போன் பண்ணிப் பாராட்டினார்கள். விவரமாகக் கடிதம் எழுதினார்கள். விகடன் அலுவலகத்தில் இன்னும் அதற்குக் கடிதங்கள் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்டர்நெட்டில் ஒரு பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

இவ்வளவு சாதகபாதக விளைவுகளை ஏற்படுத்தியதென்றால் அதில் ஏதோ ஒரு உறுத்தும் உண்மை இருக்கவேண்டும் என்பது தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் நான் எழுதியதுடன் ஒத்துப்போயிருந்தார்கள். ஒரு சிலர் நான் இளைஞர்களை வெளி¢நாட்டுக்குப் போகாதீர்கள் என்று சொல்வதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு இந்த நாட்டில் என்ன இருக்கிறது என்றரீதியில் எழுதியிருந்தார்கள். ஒருவர் பூனாவில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. போல ஸீட் கொடுத்தால் ஐந்து வருஷம் நாட்டில் இருந்தாக வேண்டுமென்று கண்டிஷன் போட்டு பாஸ்போர்ட் கொடுக்காமல் அவர்களைக் கட்டிப்போட்டால்தான் நாடு உருப்படும் என்று எழுதியிருந்தார். ஜனநாயக நாட்டு நடைமுறைக்கு ஒவ்வாத யோசனை.

நான் அந்தக் கடிதத்தில் தீர்வும் சொல்லி இருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள் சிலர். என்னை நேரில் வந்து சந்தித்து,வெளி¢நாடு போகாமல் இங்கேயே சாதிப்பவர்களை எனக்கு அடையாளம் காட்ட ஆர்வமாக இருந்தார்கள்.

அந்தக் கடிதத்தின் இலக்கு இளைஞர்கள். அரசாங்கம் அல்ல. அரசாங்கத்துக்கு யோசனை சொல்லிக் கடிதம் எழுதுவதாயிருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

முக்கியமாக சிலர் உன் இரண்டு பிள்ளைகளுமே அமெரிக்காவில் வாசம் செய்கிறார்களே… உனக்கு என்ன தகுதியிருக்கிறது மற்றவருக்கு உபதேசம் செய்ய, புத்தி சொல்ல என்று கேட்டிருந்தார்கள். அவர்கள் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை. நான் போகாதே என்று சொல்லவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். செல்லுமுன் அதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலைகளை அறிந்து செல்லுங்கள் என்றுதான் எழுதியிருந்தேன். வெளிநாட்டில் போய் சம்பாதிப்பதைத் தவிர்க்க அல்ல. மேலும் என் பிள்ளைகள் இருவரும் அமெரிக்கா சென்று வேலைசெய்வதால்தான் என்னால் அந்தக் கட்டுரையை உண்மையாக எழுத முடிந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விளைவுகளை எல்லாம் சந்தித்தவன் என்கிற தகுதியில்தான் எழுதினேன்

No comments:

Post a Comment