Wednesday, October 5, 2011

பொருள்வயின் பிரிவு - விக்ரமாதித்யன்

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து
தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம்கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்
வென்னீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்து கொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள

No comments:

Post a Comment