Monday, October 31, 2011

Stopping By Woods on a Snowy Evening - Robert Frost

Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.


- Rober Frost

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 6

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 6

136. குறிஞ்சி - தலைவன் கூற்று - மிளைபெருங் கந்தனார்

 காமம் காமம் என்ப; காமம்
 அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
 கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
 குளகு மென்று ஆள் மதம் போலப்
 பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.

 சுஜாதா: தழை தின்ற யானை

  காமம் காமம் என்கிறார்கள்
  காமம் வருத்தமில்லை; நோயில்லை;
  குறைவதில்ல; தணிவதில்லை.
  தழை தின்ற யானையின்
  மதம் போல
  பார்ப்பவர் பார்த்தால்
  அது வெளிப்படும்.

138. குறிஞ்சி - தோழி கூற்று - கொல்லன் அழிசி

 கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
 எம் இல் அயலது ஏழில் உம்பர்,
 மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
 அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
 மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

 சுஜாதா: பூ உதிரும் ஓசை

  ஊரே தூங்கியும்
  நான் தூங்கவில்லை.
  எங்கள் வீட்டுக்கு வெளியே
  மயிலின் காலடி போன்ற இலைகள் கொண்ட
  நொச்சியின் கொம்பிலிருந்து
  மலர்கள் உதிர்வதுகூடக்
  கேட்கிறது.

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

117. நெய்தல் - தோழி கூற்று - குன்றியனார்

 மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
 பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
 கண்டல் வேர் அளைச் செலீஇயர் அண்டர்
 கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
 வாராது அமையினும் அமைக!
 சிறியவும் உள ஈண்டு விளைஞர் கைவளையே.

 சுஜாதா: நழுவாத சிறிய வளையல்

  மழைக்காலத்து ஆம்பல் போன்ற
  கொக்கின் பார்வைக்கு அஞ்சிய
  ஈர நண்டு
  இடையரின் கயிறை அறுத்துச் செல்லும்
  எருதைப் போல விரைந்து செல்லும்
  துறையைச் சேர்ந்தவன்
  வராவிட்டாலும் என்ன?
  வளையல்காரரிடம்
  சிறிய வளையல்களும் உள்ளன.
 
130. பாலை - தோழி கூற்று - வெள்ளிவீதியார்

 நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
 விலங்கு இரு முநீந்ர் காலின் செல்லார்
 நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
 குடிமுறை குடிமுறை தேரின்,
 கெடுநரும் உளரோ நம் காதலோரே.

 சுஜாதா: எப்படித் தப்புவார்?

  பூமியைத் தோண்டி புகுந்துகொள்ள முடியாது
  வானத்தில் ஏற முடியாது
  கடல்மேல் நடந்து செல்ல முடியாது
  நாடு நாடாக, ஊர் ஊராக,
  வீடு வீடாகத் தேடினால்
  அகப்படாமல் தப்பிவிடுவாரா
  என் காதலர்?

131. பாலை - தலைவன் கூற்று - ஒரேழுவனார்

 ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
 பேர் அமர்க கண்ணி இருந்த ஊரே
 நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
 ஈரம பட்ட செவ்விப் பைம் புனத்து
 ஓர் ஏர் உழவன் போலப்
 பேரு விதுப்பு உற்றன்றால் நோகா யானே.

 சுஜாதா: பெரிய வயல், ஒரே ஒரு ஏர்

  அசைகின்ற மூங்கில் போன்ற தோள்கள்
  சண்டையிடும் கண்கள்
  கொண்ட காதலி
  வெகு தூரத்தில் இருக்கின்றாள்.
  பசுமையான அகன்ற வயல் இருந்தும்
  ஒரே ஒரு ஏருள்ள உழவன் போல
  அவசரத்தில் தவிக்கின்றேன்.

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

58. குறிஞ்சி - தலைவன் கூற்று - வெள்ளிவீதியார்

 இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
 நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
 ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்,
 கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
 வெண்ணெய் உணங்கல் போலப்
 பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!

 சுஜாதா: கண்ணால் காக்கும் வெண்ணை.

  நண்பா! திட்டுகிறாய்
  என் நோயை உன்னால்
  நிறுத்த முடிந்தால் நல்லது.
  வெயில் காயும் பாறை மேல்
  கையில்லாத ஊமை
  கண்ணால் காப்பற்ற வேண்டிய
  வெண்ணை போல
  உருகும் நோய் இது,
  தவிக்க முடியாது.
 
95. குறிஞ்சி - தலைவன் கூற்று - கபிலர்

 மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
 கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
 சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
 நீர் ஓரன்ன சாயல்
 தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே

 சுஜாதா: நீரும் நெருப்பும்

  நண்பா!
  மலையருவி பாறைகளில் வெடிக்கும்
  சிற்றூரின் தலைவனின் மகளின்
  நீர்போன்ற மென்மை
  நெருப்பைப் போன்ற என்
  வைராக்கியதைக்
  கெடுகிறது.

112. குறிஞ்சி - தலைவி கூற்று - ஆலந்தூர் கிழார்

 கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
 எள் அற விடினே உள்ளது நாணே
 பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
 நாருடை ஒசியல் அற்றே
 கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே

 சுஜாதா: யானை முறித்த கிளை

  வதந்திக்கு அஞ்சினால்
  ஆசை குறைந்து விடும்.
  அஞ்சாவிட்டால்
  வெட்கம் மட்டுமே மிஞ்சும்
  யானை முறித்த பின்
  நிலத்தில் விழாமல்
  ஒடிந்த கிளையைப் போன்றது
  பார் தோழி, அவர் சுகித்த
  என் நிலைமை.

Thursday, October 20, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

41. பாலை - தலைவி கூற்று - அணிலாடு முன்றிலார்

 காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
 சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
 அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
 மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற்
 புலப்பில் போலப் புல்லென்று
 அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே

 சுஜாதா: அணில் விளையாடும் முற்றம்

  காதலர் அருகில் இருக்கும் போது
  பெரிதாக விழா கொண்டாடும் ஊரைப்போல் மகிழ்வேன்.
  மக்கள் விலகிச்சென்ற சிற்றூரில்
  அணில் நடமாடும் முற்றம் போல
  உணர்கிறேன்
  அவர் விலகிச் சென்ற போது.

46. மருதம் -  தலைவி கொற்று - மாமிலாடனார்

 ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
 கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
 முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
 எருவின் நுண் தாது குடைவன ஆடி
 இல் இறைப் பள்ளித் தம பிள்ளையோடு வதியும்
 புன்கண் மாலையும் புலம்பும்
 இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே.

 சுஜாதா: தனிமையின் நிறம் சாம்பல்

  ஆம்பல் பூவின் சாம்பல் நிறத்தில்
  சிறகுடைய வீட்டுக்க் குருவி
  தானியங்களைப் பொறுக்கிச் சேர்த்து
  தன் குஞ்சுகளோடு விளையாடும்
  மாலை நேரமும் தனிமையும்
  அவர் சென்ற ஊரில்
  இல்லையோ?

58 குறிஞ்சி - தலைவி கூற்று - மீநெறிதூண்டிலார்

 யானே ஈண்டையேனே என் நலனே,
 ஏனர் காவலர் கவண் ஒழி வெரீஇக்
 கான யானை கை விடு பசுங் கழை
 மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
 கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே

 சுஜாதா: விலகிய வேகம்

  நான் இங்கே இருக்கின்றேன்
  என் நிலைமை
  கவண்கல் வீசுபவர் ஒலி கேட்டு
  பயந்து யானை கைவிடும்
  மூங்கில் போல;
  மீனகப்பட்ட தூண்டில் போல
  விரைவாக அவனுடன்
  பழகிய நாட்கள் கழிந்தன

Tuesday, October 18, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1 - யும் படியுங்களேன்.


28. பாலை - தலைவி கூற்று - ஔவையார்

 முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
 ஓரேன், யானும் ஊர் பெற்றி மேலிட்டு,
 'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன் கொல்
 அலமரல் அசைவளி அலைப்ப, என்
 உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே

 சுஜாதா: என்னத்தைச் செய்ய

  முட்டிக்கொள்வேனா!
  என்னை நானே தாக்கிக்கொள்வேனா!
  ஆ ஊ என்று அலறவா?
  மெல்லிய காற்று அசைக்கும்
  என் நோய் அறியாமல்
  தூங்கிக்கொண்டிருக்கும்
  இந்த ஊரை என்ன செய்ய?

37. பாலை - தோழி கூற்று - பாலை பாடிய பெருங்கடுங்கோ

 நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
 பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
 மென் சினை யாஅம் பொளிக்கும்
 அன்பின் தோழி! அவர் சென்ற ஆறே.

 சுஜாதா: மனம் மாறிவிடலாம்

  உன்மேல் நிறைய ஆசை உள்ளவர்
  பெண் யானையின் பசியை நீக்க
  ஆன் யானை மரப்பட்டையை உரித்துக்கொடுக்கும்
  காட்சியை வழியில் பார்த்தால்
  அவர் திரும்பி வந்துவிடலாம்
  என் அன்புத் தோழியே!

40. குறிஞ்சி - தலைவன் கூற்று - செம்புலப்பெயநீரார்

 யாயும் ஞாயும் யார் ஆகியரோ
 எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
 யானும் நீயும் எவ் வழி அறிதும்
 செம் புலப் பெயல் நீர் போல
 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

 சுஜாதா: செம்மண்ணில் கலந்த நீர்

  என் தாயும் உன் தாயும் யார் யாரோ
  என் தந்தையும் உன் தந்தையும்
  எப்படி உறவினர்?
  நானும் நீயும் எப்படி அறிந்தோம்?
  செம்மண்ணில் மழைநீர் போல்
  அன்பு நெஞ்சங்கள் கலந்து விட்டனவே!

http://bodhai.blogspot.com/2011/10/blog-post_17.html 

Monday, October 17, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

எனக்குப் பிடித்த சில குறுந்தொகைப் பாடல்கள். "401 காதல் கவிதைகள் - குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்." என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய நூலிலிருந்து.

சுஜாதா பரிந்துரைப்பது போல திணை துறை, சொன்னவர் போன்றவற்றை விட சொல்லப்பட்ட கருத்துக்களில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

வார்த்தைக்கு வார்த்தை உரை இல்லை; மூலத்தின் எளிய வடிவம். தர வரிசையில் இல்லை, படிக்கப் படிக்க வலையேற்றும் எண்ணம்.

இன்றைக்கும் பொருந்தும் சூழ்நிலைகளும், மனித மனங்களும், அவற்றின் எண்ண வெளிப்பாடுகளும் பீறிடும் இந்த அபாரமான கவிதைகளை ரசிக்க முதலில் தேவை ஆர்வம்; பிறகு கொஞ்சம் பொறுமை.

முதல் வாசிப்பில் புரியாமல் இருக்கலாம். இன்னொரு முறை படிக்க வேண்டும். எளிய வடிவத்தில் கவிதையின் கருத்தை பிடித்த பின், மூலத்தின் சொற்களைக் கவனிக்கலாம்.

புரியாவிட்டாலும் கவலை இல்லை, நேரம் வரும் போது தானாக புரியும். எனக்கு அப்படித்தான். இரண்டு வருடத்திற்கு முன் சாதரணமாக கடந்து சென்ற பாடல் இப்போது மிகவும் பிடிக்கிறது; அதனால் தான் சொல்கிறேன், நேரம் வரும் போது தானாக புரியும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் படிக்க வேண்டியது மட்டும் தான். படிப்போம் வாருங்கள்...

14. குறிஞ்சி - தலைவன் கூற்று - தொல் கபிலர்

 அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
 வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அறிவையைப்
 பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
 அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
 நல்லோள் கணவன் இவன் எனப்
 பல்லோர் கூற, யாஅம் நாணுக சிறிதே.

 சுஜாதா: வெட்கப்படுகிறேன்

  சிவந்த நாக்கு, பயப்படும்படியான
  அழகான சிறிய பற்கள்
  குறைந்த பேச்சுள்ள இந்தப் பெண்ணை
  நான் அடைந்தபோது,
  இந்த ஊரே என்னை
  இந்த நல்லவன்தான் இவள் கணவன் என்று
  சொல்லும்போது
  கொஞ்சம் வெட்கப்படுவேன்.
----------------------------------------------------------------------------------------------------

20. பாலை - தலைவி கூற்று - கோப்பெருஞ்சோழன்

 அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
 பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
 உரவோர் உரவோர் ஆக
 மடவம் ஆக மடந்தை நாமே

 சுஜாதா: அப்படியே இருக்கட்டும்

  அருளும் அன்பும் துறந்து
  துணையைப் பிரிந்து
  செல்வத்தைத் தேடிப்
  பிரிபவர்கள்
  கெட்டிக்காரர்கள் என்றால்
  கெட்டிக்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருக்கட்டும்!
  நம்போன்ற பெண்கள் முட்டாள்களாக இருக்கட்டும்!
----------------------------------------------------------------------------------------------------

27. பாலை - தலைவி கூற்று - கொல்லன் அழிசி

 கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
 நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு,
 எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
 பசலை உணீஇயர் வேண்டும்
 திதலை அல்குல் என் மாமைக் கவினே

 சுஜாதா: யாருக்கும் பயனில்லை

  கன்றும் உண்ணாமல் கறக்கவும் கறக்காமல்
  நிலத்தில் வழியும் பசுவின் பால் போல
  எனக்கும் இல்லாமல்
  என் தலைவனுக்கும் உதவாமல்
  என் அழகு வீணாகிறது

உண்மை - சுஜாதா

உண்மை ஒவ்வொரு முறை சொல்லப்படும்போதும் கொஞ்சம் பொய் கலக்கப்படுகிறது. இறுதியில் பொய் பட்டும் பாக்கியிருந்து உண்மை நீர்த்துப்போகிறது.
- சுஜாதா, உண்மையும் பொய்யும் கட்டுரையில், 'இன்னும் சில சிந்தனைகள்', உயிர்மை பதிப்பு

சக்திக்கனல்

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்.
என் கல்யாணம் மட்டும்
ஏன் செட்டிப்பாளையத்தில் நிச்சயிக்கப்பட்டது?
- சக்திக்கனல்

உனக்கும் எனக்கும் - மீரா

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவினர்கள் - மைத்துனன்மார்கள்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே....
- மீரா

Friday, October 14, 2011

தழுவுதல் - வீரான் குட்டி (மலையாளம்)

பூமிக்கு அடியில்
வேர்களால்
தழுவிக் கொள்கின்றன
இலைகள்
தொட்டுக்கொள்ளுமென
அஞ்சி
நாம்
விலக்கிநட்ட மரங்கள்


 

உன்னைப்பற்றி - வீரான் குட்டி (மலையாளம்)

புழுவாய்
உறங்கி
விழித்தபோது
பட்டாம்பூச்சியாக
இருந்தேன்.

அவ்வளவுக்
காதலுடன்
கனவில்
வந்து முத்தமிட்டது
யார்?

படிப்பு - வீரான் குட்டி (மலையாளம்)

புரியவேயில்லை
அவளுக்கு
பட்டுப்பூச்சி படம்காட்டி
டீச்சர்
வண்ணத்துப் பூச்சி
என்று
கற்பித்துக் கொண்டேஇருந்தது.

கடைசியில்
கஷ்டப்பட்டு
அவளும்
வண்ணத்துப்பூச்சி
என்று
சொல்ல ஆரம்பித்தாள்.

பட்டுப்பூச்சி என்று
அதை
அதன் வீட்டில்
கூப்பிடுவார்களாக இருக்கும்
என்று எண்ணியபடி

Thursday, October 13, 2011

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா

முதலில்,மோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்க்கலாம். சிவஞானபோதம் என்னும் நூல், மோகம் என்பது மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி என்கிறது. கம்பர் மோகமெங்குமுளவாக என்று திகைப்பு என்கிற அர்த்தத்தில் சொல்கிறார்.


மோகம் பழைய வார்த்தை.மெள்ள மெள்ள இந்தச் சொல் மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு என்று பாரதி திணறுமளவுக்கு மனதை ஆக்கிரமிக்கும் உணர்ச்சிக்கு, ஆங்கிலத்தில் Obsession என்று சொல்கிறார்களே… அதற்கு ஈடாகப் பயன்படும் வார்த்தையாகி விட்டது. இந்தக் கோணத்தில் தான் நாம் வெளிநாட்டு மோகத்தைப் பார்க்கப் போகிறோம்.


வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று - வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் (மேட்ச்பாக்ஸ்கூட ஃபாரின்தாங்க எங்க வீட்ல…). இரண்டு -வெளி¢நாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகித்து, அதைக் - குருட்டுத்தனமாகக் கடைப்பிடிப்பது. (ராதாவுக்கு கோக் இல்லைன்னா உயிர் வாழமுடியாது). மூன்றாவது - இடது கையை வெட்டிக் கொடுத்தாவது வெளி¢நாடு சென்றே ஆகவேண்டும் என்கிற மோகம் (சியாட்டில்ல எப்ப மழை பெய்யும்னு சொல்ல முடியாது…).


வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம் இருப்பதில் ஓரளவுக்குத் தவறில்லை… வெளிநாட்டில் தயாராகும் சில விற்பனைப் பொருட்கள், அந்த நாடுகளின் நுகர்வோர் கலாசாரத்தின் கடும் போட்டியால் நல்ல தரமுள்ளவையாக இருக்கும்.


உதாரணமாக, அமெரிக்காவில் தயாராகும் ஷேவர்கள் நன்றாக சவரம் செய்யும். ஜப்பான், கொரிய நாட்டு கம்ப்யூட்டர்,வி.சி.ஆர்., எலெக்ட்ரானிக் சமாசாரங்கள் நல்ல தரமுள்ளவையாக இருக்கும்.இவற்றைப் பாராட்டுவதிலோ, பயன்படுத்துவதிலோ - ஏதும் தயக்கமில்லை.ஆனால், அந்தப் பொருட்கள் நமக்குத் தேவையானதாக இருக்க வேண்டும். ஒரு லாப்-டாப்போ, ஒரு மாக்கின்டோஷோ, ஒரு சின்தசைஸரோ, கீ-போர்டோ இல்லாமல் நம்மில் பலரால் உயிர் வாழ முடியும். பர்மாபஜாரில் கிடைக்கிறது என்று சின்தசைஸர்களைக் காசைக் கொட்டி வாங்கி, அதில் ஒரே ஒரு பாட்டை மட்டும் வாசித்துக்கொண் டிருப்பது வீண். அதற்கு உள்நாட்டு ஆர்மோனியம் போதும்.


அதேபோல, நல்ல கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக - இருந்தால் மாக்கின்டோஷ்- கணிப்பொறி வாங்கலாம். அதை வாங்கி வைத்து, லெட்டர் அடிக்கவும் கேம்ஸ்விளையாடவும் பயன்படுத்துவது முட்டாள்தனம். நம் நாட்டில் கிடைக்காத, தரம்வாய்ந்த, விலை குறைந்த வெளி¢நாட்டுப் பொருட்களை, அவற்றுக்குத் தேவையிருக்கும் போது வாங்கலாம். வெளி¢நாடு என்கிற ஒரே காரணத்துக்காக, அவற்றை ஒதுக்கத் தேவையில்லை.



சுதேசிக் கொள்கை, இந்த உலகப் பொதுச் சந்தை காலகட்டத்தில் அர்த்தமற்றது. மேலும், உள்நாட்டிலேயே தயாராகும் எல்லாப் பொருட்களிலும் வெளிநாட்டுத்தொழில் நுட்பமோ, மூலப் பொருளோ இருந்தே தீர்கிறது. வெளிநாட்டுப் பொருளே கூடாது என்று பிடிவாதமாக இருந்தால், வாழை இலையைத் தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது.


உதாரணமாக, ஜப்பானிய நேஷனல் கம்பெனியின் ரைஸ் குக்கர் உலகப் பிரசித்திப் பெற்றது. அதை நிச்சயம் வோல்டேஜ் பார்த்து வாங்கலாம். பிரம்மச்சாரிகளுக்கும் வீட்டில் சமைக்கும் இளம் கணவர்களுக்கும் அது ஒரு வரப்பிரசாதம். அதேபோல, டோஸ்ட்டர் போன்ற பொருட்கள் நம் அவசரங்களுக்குப் பயனுள்ளவை. ஆனால், வெளிநாட்டு முத்திரை இருக்கிறது என்பதால் ஷ¨க்கள், செருப்புகள், சிகரெட்டுகள், வாசனை ஷாம்புகள், சோப்புகள் போன்ற கண்டா முண்டா சாமான்களையெல்லாம் வாங்கிப் போடுவதில் அர்த்தமில்லை.


நான் சென்ற ஒரு வீட்டில் கக்கூஸ் காகிதம்கூட ஹாலந்திலிருந்தோ, நியூஸிலாந்திலிருந்தோ கொண்டுவந்தது என்று - பெருமைப்பட்டுக் கொண்டார்கள். முதலில் பேப்பரே எதற்கு என்பது என் கேள்வி. ஃபாரின் விஸ்கிதான் மயக்கம் வராது. ஃபாரின் சிகரெட்டுதான் கான்சர் வராது என்னும் மனப்பான்மை தீங்கானது.


நான் பணிபுரிந்த பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மேலதிகாரி ஒருவருக்கு, லண்டனில் கிடைக்கும் - எரின்மூர் என்னும் புகையிலைதான் பைப்பில் அடைத்துப் பிடிக்க வேண்டும். அதனால், வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இன்ஜினீயரையும் ஒரு டப்பா வாங்கிவரச் சொல்வார். அதனாலேயே அவர் சில சமயங்களில் நடுநிலைமையை இழக்கவேண்டி இருந்தது.


மும்பை விமானநிலையத்தில் ஒரு முறை திரும்பியபோது, கஸ்டம்ஸ் அதிகாரியிடம் ஓர் இளைஞர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து சைக்கிள் ஒன்று கொண்டுவந்திருந்தார் (பபுலுவுக்கு விளையாட!). அப்புறம் ஒரு பெட்டி நிறைய சாக்லெட். கஸ்டம்ஸ் அதிகாரி இன்னும் லஞ்சம் வாங்கத் துவங்காத இளைஞர். ஏன் சார், நம் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு லட்சக்கணக்காக சைக்கிள் ஏற்றுமதி செய்கிறோம். நீங்கள் சைக்கிளை இம்போர்ட் செய்கிறீர்களே… உங்களை என்ன சொல்வது..? என்றார். நீ என்ன அதைக் கேட்பது..? அதற்கான டூட்டி கொடுக்கிறேன். சைக்கிள் என்ன, அண்டர்வேர்கூட என்னுடையது ஃபாரின்தான்… பார்க்கிறாயா..? என்றார் இளைஞர். அதிகாரி பதட்டப்படாமல், ஏறக்குறைய ஒரு மோட்டார் சைக்கிள் விலைக்கு டூட்டி தீட்டினார்! ஒரு ஃபேமிலிக்கு இத்தனை சாக்லெட் அதிகம். இதை நான் அனுமதிக்கப் போவதில்லை… என்று கடுப்பில் தடுத்துவிட்டார். அந்த இளைஞர், தன் குடும்பத்தினர் அனைவரையும் உட்காரவைத்து, அங்கேயே அத்தனை சாக்லெட்டையும் சாப்பிட்டு முடித்தார்! இம்மாதிரியான பகுத்தறிவை மயக்கும் அபத்தங்கள் கொண்ட மோகத்தைத்தான் நான் தவிர்க்க வேண்டும் என்கிறேன்.


அடுத்து,வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல் மோகம். இது நமக்கு ஊடகங்களிலிருந்து வருகிறது. ஊடகம் என்ற வார்த்தை சினிமா, டி.வி., செய்தித்தாள் போன்றவற்றுக்குப் பொதுவான, மீடியம் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே… அதற்குத் தமிழ். குறிப்பாக, நம் நகர்ப்புற இளைஞர்கள் இவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.மூத்திரம் போவதற்குக்கூட, ஆங்கிலம் பேசிக்கொள்ளும் ஐ டோண்ட் நோ டமில் யார் வகை. இது ஒரு அபாயகரமான கலாசாரத் தாக்கம்.


அவர்கள் பலரும் சூயிங்கம் மெல்வது, ஜீன்ஸ் அணிவது, இலக்கில்லாமல் சுற்றுவது, மோட்டார் சைக்கிளில் கையில் தோல் பெல்ட், கண்ணில் ரேபான், பின்ஸீட்டில் பெண் அணிந்து டிஸ்கோக்களுக்குப் போவது, அங்கே ஸ்பைஸ் கர்ள்ஸ், மடோனா, பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் போன்ற மேற்கே காலாவதியான பெயர்களை அடிக்கடி பயன்படுத்துவது, டமில் ஃபிலிம்ஸ் யார் பார்ப்பார்கள்..? கர்னாடிக் மியூஸிக் போர் யார்… சுத்திஃபை கடிச்சுஃபை… போன்ற தமிழாங்கில அசிங்கங்களைப் பயன்படுத்துவது…


இம்மாதிரியான மேம்போக்கான பழக்கங்களின் அடித்தளத்தில் சில அபாயங்கள் உள்ளன. பெற்றோரை, பெரியவர்களை மதிக்காமல் ஊர் சுற்றுவது, போதைப் பொருட்களுடன் முதல் பரிச்சயம், படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவது, தம் இயலாமைகளுக்குப் பெற்றோரைக் குற்றம் சொல்வது போன்ற அபாயங்கள். சுவாமி சுகபோதானந்தா நமக்கு நவரசங்களில் பயரசமும் வேண்டும் என்கிறார். ஆரோக்கியமான பயம், healthy fear… குறிப்பாக, மேல்நாட்டுப் பழக்கங்களின்மேல் வேண்டும். இவை நகர்ப்புறப் பழக்கங்கள். சிறு நகரங்களும் கிராமங்களும் அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை. இருந்தும் விரைவிலேயே மேல்நாட்டுப் பழக்கங்கள் அனைத்தும் சாட்டிலைட் மூலம் கிராமப்புறங்களிலும் பரவிவிடும் அபாயம் உண்டு. இதற்குப் பயப்படுங்கள். 

இவற்றுக்கு இரண்டு முகங்கள் உண்டு. அந்த நாடுகளின் சமூக அமைப்பும் - கலாசாரமும் சந்தர்ப்பங்களும் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அவர்கள் சின்ன வயசிலேயே பெற்றோரைப் புறக்கணித்துவிடுவார்கள். சொந்தமாக சம்பாதிப்பார்கள். பதினாலு வயசுக்குள் புணர்ச்சி அனுபவம். இல்லையேல் அது அப்நார்மல். ஒரு குறிப்பிட்ட வயசு வரை திரிந்துவிட்டு சட்டென்று ஒரு நாள் காதுக் கடுக்கனை கழற்றிவிட்டு முடி வெட்டிக்கொண்டு சூட் அணிந்து கொண்டு கம்ப்யூட்டர் படிக்கப் போய்விடுவார்கள். அப்படி நம் நாட்டிலும் இருந்தால் இந்தப் பழக்க வழக்கங்களை ஒரு தற்காலிக உபத்திரவமாக சகித்துக்கொள்ளலாம். அது நம் நாட்டில் நடப்பதில்லை. பெற்றோர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறீர்கள். அவர்கள் ஓவர் டைம் பண்ணி, பி.எஃப். லோன் எடுத்து சம்பாதித்த காசில் நீங்கள் திரிகிறீர்கள்.


அங்கே வேலைக்குப் போக கல்லூரி படிப்பு தேவையில்லை. ஓரளவு சம்பாதிக்கும் வாய்ப்புகள் அங்கு ஏராளம். அதனால் அந்தப் பழக்க வழக்கங்களுக்கான பொறுப்பையும் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். தாமே ஒரு கட்டத்தில் தெளிந்துவிடுகிறார்கள். நம் நாட்டில் இந்தப் பழக்க வழக்கங்கள் அப்பா அம்மா சம்பாதிக்கும் காசில் நடக்கிறது. அதுதான் பெரிய வேறுபாடு.


இன்று சென்னை, பெங்களூர் மாதிரி நகரங்களில் திரியும் அத்தனை இளைஞர்களையும் உற்றுப் பார்க்கும் போது ஒரு ஆட்டு மந்தைத்தனம் தெரிகிறது. இளம் பெண்கள் காலேஜுக்கு கட் அடித்து விட்டு அலைவதைப் பார்க்கிறேன். மார்பு குலுங்க பனியன் போட்டுக் கொண்டு, தொடை தெரிய டிராயர் அணிந்துக்கொண்டு, உடம்பைக் காட்டும் பழக்கம் மனதை பாதிக்காமல் இருக்க நம் சமூகம் அத்தனை பக்குவம் இல்லாதது. மேலும் ஏழை, பணக்கார வேறுபாடுகள் நம்மிடம் மிக அதிகம். இதனால் ஈவ் டீசிங், பெண் பலாத்காரம் போன்ற வன்முறைகள் ஏற்படுகின்றன.


ஜீன்ஸ் போன்றவை ஸ்கூட்டர் மெக்கானிக் வேலைகளுக்கு சரி. மற்றவர்களுக்குத் தேவைதானா என்பதே எனக்குச் சந்தேகம். தேவைதான், அதை வருஷத்துக்கு ஒரு முறை துவைத்து போட்டுக்கொள்வதில் முரட்டு சௌகரியம் இருக்கிறது என்றால் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதை கௌரவம், லீ ஜீன்ஸ்தான் உடம்புக்கு ஆகும், அதுதான் பெருமை என்றெல்லாம் சொல்லாதீர்கள். ரிஷிமூலம் பார்த்து விசாரித்தால் அந்த ஜீன்ஸ் பங்களாதேஷிலோ அல்லது வியட்நாமிலோ செய்யப்பட்டு அமெரிக்கா போய்விட்டு இந்தியா வந்திருக்கும்.
இனி, வெளிநாடு செல்லும் மோகம்.

பெரும்பாலும் இன்ஜினீயரிங் படிக்கும் நகர்ப்புற இளைஞர்களிடம் இந்த மோகம் தலைக்கிறுக்கி ஆடுகிறது (டாக்டர்களை அவர்கள் அதிகம் அனுமதிப்பதில்லை)

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இளைஞர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.

பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

’அன்புடன்…’ வந்த கடிதங்கள்…

விகடனில் அன்புடன் பகுதியில் வெளி¢நாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு நான் எழுதிய கடிதம் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறையப் பேர் போன் பண்ணிப் பாராட்டினார்கள். விவரமாகக் கடிதம் எழுதினார்கள். விகடன் அலுவலகத்தில் இன்னும் அதற்குக் கடிதங்கள் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இன்டர்நெட்டில் ஒரு பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

இவ்வளவு சாதகபாதக விளைவுகளை ஏற்படுத்தியதென்றால் அதில் ஏதோ ஒரு உறுத்தும் உண்மை இருக்கவேண்டும் என்பது தெரிகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் நான் எழுதியதுடன் ஒத்துப்போயிருந்தார்கள். ஒரு சிலர் நான் இளைஞர்களை வெளி¢நாட்டுக்குப் போகாதீர்கள் என்று சொல்வதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு இந்த நாட்டில் என்ன இருக்கிறது என்றரீதியில் எழுதியிருந்தார்கள். ஒருவர் பூனாவில் உள்ள ஏ.எஃப்.எம்.சி. போல ஸீட் கொடுத்தால் ஐந்து வருஷம் நாட்டில் இருந்தாக வேண்டுமென்று கண்டிஷன் போட்டு பாஸ்போர்ட் கொடுக்காமல் அவர்களைக் கட்டிப்போட்டால்தான் நாடு உருப்படும் என்று எழுதியிருந்தார். ஜனநாயக நாட்டு நடைமுறைக்கு ஒவ்வாத யோசனை.

நான் அந்தக் கடிதத்தில் தீர்வும் சொல்லி இருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள் சிலர். என்னை நேரில் வந்து சந்தித்து,வெளி¢நாடு போகாமல் இங்கேயே சாதிப்பவர்களை எனக்கு அடையாளம் காட்ட ஆர்வமாக இருந்தார்கள்.

அந்தக் கடிதத்தின் இலக்கு இளைஞர்கள். அரசாங்கம் அல்ல. அரசாங்கத்துக்கு யோசனை சொல்லிக் கடிதம் எழுதுவதாயிருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

முக்கியமாக சிலர் உன் இரண்டு பிள்ளைகளுமே அமெரிக்காவில் வாசம் செய்கிறார்களே… உனக்கு என்ன தகுதியிருக்கிறது மற்றவருக்கு உபதேசம் செய்ய, புத்தி சொல்ல என்று கேட்டிருந்தார்கள். அவர்கள் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை. நான் போகாதே என்று சொல்லவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். செல்லுமுன் அதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலைகளை அறிந்து செல்லுங்கள் என்றுதான் எழுதியிருந்தேன். வெளிநாட்டில் போய் சம்பாதிப்பதைத் தவிர்க்க அல்ல. மேலும் என் பிள்ளைகள் இருவரும் அமெரிக்கா சென்று வேலைசெய்வதால்தான் என்னால் அந்தக் கட்டுரையை உண்மையாக எழுத முடிந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விளைவுகளை எல்லாம் சந்தித்தவன் என்கிற தகுதியில்தான் எழுதினேன்

70வது பிறந்த நாள் கட்டுரை - சுஜாதா

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.

"எதுக்குப்பா?"

"தொடுங்களேன்!"

சற்று வியப்புடன் தொட்டார்.

"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?" என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து… பாத்து…"

"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.

"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.

அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"

"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே… அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது… இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி’யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை… நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை… இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்… ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல… வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்… முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.

அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்… "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே… என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.

நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்… "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

நன்றி: ஆனந்த விகடன்

Wednesday, October 12, 2011

நானும் நீயும் - ஜெயபாஸ்கரன்

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்கு பின்னால்
நின்று கொண்டு இருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளை சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோகியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லி கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்கு பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை 

மனித வணக்கம் - கமல்ஹாசன்

தாயே... என் தாயே!
நான் மீட்ட சோலே!
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே
என் மனையாளின்
மானசீகச் சக்கரவர்த்தி சரண்

தகப்பா – ஓ – தகப்பா
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதையாய் இன்று
புரியா வரி இருப்பின் கேள்...
பொழிப்புரை நான் சொல்கிறேன்

தமையா – ஓ – தமையா
என் தகப்பனின்
சாயல் நீர்
அச்சகம் தான் ஒன்றிங்கே –
அர்த்தங்கள் வெவ்வேறு

தமக்காய் – ஓ – தமக்காய்
தோழி... தொலைந்தே போனாயே –
துணை தேடிப் போனாயோ...
மனைவி – ஓ – காதலி
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள்
புரியும்வரை.

மகனே – ஓ – மகனே
என் விந்திட்ட விதையே...
செடியே... மரமே... காடே...
மறுபிறப்பே
மரண சௌகர்யமே... வாழ்...

மகளே – ஓ – மகளே...
நீயும் என் காதலியே...
எனதம்மை போல்
எனைப் பிரிந்தும் நீ
இன்பம் காண்பாயோ...
காதலித்த கணவனுக்குள்
எனைத் தேடுவாயோ...

நண்பா – ஓ – நண்பா...
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடம் அவ்விதமே.

பகைவா – ஓ – பகைவா...
உன் ஆடையெனும் அகந்தையுடன்
என் அம்மணத்தைக் கேலி செய்வாய்
நீ உடுத்து நிற்கும்
ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்

வாசகா – ஓ – வாசகா...
என் சமகால சகவாசி
வாசி...
புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து...
எனது கவி உனதும்தான்
ஆம்...
நாளை உன்வரியின்
நான் தெரிவேன்.

மகளே - கமல்ஹாசன்

பிரதிபிம்பம் பழங்கனவு
மறந்த என் மழலையின் மறுகுழைவு
மகளே
உனக்கு என் மூக்கு என் நாக்கு!

என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு
தினம் உனக்காய் நான் படிப்பேன் என் குரலில்
பாசத்தில் எனைப் பெற்றோர் செய்த தவறெல்லாம்
தவறாமல் நான் செய்வேன்
என் ரத்தம் எனது சதை எனக் கூவி
உன் சித்தம் உன் போக்கை இகழ்ந்திடுவேன்
உன் போக்கு இதுதான் என நீ மறுக்க
உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்
என் அப்பனைப் போல்!

அன்று - சாய் நாற்காலியில் வரப்போகும்
கவிதைகளை இன்றே நான் எழுதிவிட்டால்
அன்று - நான் பேசலாம் உன்னோடு

எழுதிவிட்டேன்
வா - பேச!

பெருஞ்சிங்கம் - கமல்ஹாசன்

ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை,
இறந்தபின் சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு

- கமல்ஹாசன்

அருகாமையில் இருக்கக் கூடும் - மனுஷ்யபுத்திரன்

இன்றும் தேவைப்படுகின்றன
ஏராளமான உதவிகள்
இருக்கக் கூடும் நீ
கண்ணீரை ரகசியமாகத்
துடைத்துக் கொள்ளும்
யாரோ ஒருவருக்கு
வெகு அருகாமையில்

ஒரு குழந்தைக்கு
ஷூ வின் கயிறைக் கட்டுவதில்

மழையில் நின்றுவிட்ட
ஒரு ஸ்கூட்டரை இயக்குவதில்

தப்பி வந்த கைதி ஒருவனின்
கை விலங்கை உடைப்பதில்

ஒரு சிறு பெண்ணின்
ரகசிய கர்ப்பத்தைக் கலைப்பதில்

ஒரு குருடனுக்கு 
சரியாக வழி காட்டுவதில்

நிற்க முடியாத ஒருவருக்கு
பேருந்தில் உன் இருக்கையைத் தருவதில்

யாரோ ஒருவரின்
கழிவறையை சுத்தம் செய்வதில்

கீழே விழுந்துவிட்ட ஒரு பறவைக் குஞ்சை
அதன் கூட்டுக்குத் தருவதில்

வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதப்பட்ட
காதல் கடிதங்களைத் திருப்பிக் கொடுத்துவிடுவதில்

இறந்துகொண்டிருப்பவருக்கு
இல்லை நீங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்
என்று பொய் சொல்வதில்

நிராதரவான ஒரு குரலுக்கு
வெறுமனே செவி சாய்ப்பதில்

பேச்சு வராத ஒருவரின்
சைகைகளைப் புரிந்துகொள்வதில்

பார்த்த ஒன்றைப்
பார்க்கவே இல்லை என்று சொல்வதில்

கேட்ட ஒன்றைக்
கேட்கவே இல்லை என்று சொல்வதில்

தேவைப்படும் பெரும்பாலான உதவிகள்
கேட்கப்படுவதே இல்லை
நாம்தான் அவற்றைப்
புரிந்துகொள்ள வேண்டியவர்களாகிறோம்


உனக்கு எவ்வளவோ நேரமிருக்கிறது
ஒரு சிறு செயல்
அது உன்னைப் புனிதனாக்குகிறது

எப்போதோ தேவைப்படலாம்
ஒரு பெரிய தியாகம்
அது உன்னை
மனிதனாக்கக் கூடும்

Wednesday, October 5, 2011

பொருள்வயின் பிரிவு - விக்ரமாதித்யன்

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து
தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம்கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்
வென்னீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்து கொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள

கூண்டுப்புலிகள் - விக்ரமாதித்யன்


நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு

பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்

சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை

உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்

வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து

ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்

தரிசனம் - ஆத்மாநாம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை;

அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்.

ஆயினும்
மனதினிலே ஒரு நிம்மதி

அம்மாவின் பொய்கள் - ஞானக்கூத்தன்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒரு முறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

மேசை நடராசர் - ஞானக்கூத்தன்

மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்கள் அல்ல. கிங்கரர் அல்ல.

எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கறுத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப் படுத்துக் கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுது பார்க்கப்பட
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி, மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்

ஆனால் நடராசர்
ஆடிக் கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்

எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்

உள்ளங்கைக்குள் ஏந்தக்கூடிய முட்டை - கல்யாண்ஜி

உள்ளங்கைக்குள் ஏந்தக்கூடிய முட்டை
அளவுக்கு அழகானது உண்மை.
நான் கை நழுவ விட்டிருக்கிறேன்.
அதைப் பொறுக்கி எடுத்ததும் நான்தான் எனினும்
மஞ்சட் கருவும் வெள்ளைக் கருவும்
சிந்திச் சிதறி
உண்மையின் அருவருத்த முடைநாற்றம்
தோடுகள் மட்டும் இன்னும் அழகாக,
நீங்கள் உங்கள் முட்டைகளைச்
சிதறவிடுவதில்லை.
உயிரும் சிறகும் நிரம்பிய
ஒருபறவையைப் பறக்க விட்டிருக்கிறீர்கள்
அதிலிருந்து,
ஏற்கனவே வானம் அழகானது.
மேலும் அழகாகி இருக்கிறது அந்தப் பறவையால்

இறந்தவனின் ஆடைகள் - மனுஷ்ய புத்திரன்

இறந்தவனின் ஆடைகளை
எப்படிப் பராமரிப்பதென்றே
தெரியவில்லை

இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்துகொண்டுவிட முடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகிவிடும்

அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல

தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்

இறந்தவனின் ஆடைகளை
அழித்துவிடலாம்தான்
இறந்தவனைத்
திரும்பத் திரும்ப அழிக்க
கைகள் நடுங்குகின்றன

இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது
(அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு

அம்மா இல்லாத முதல் ரம்ஜான் - மனுஷ்யபுத்திரன்

அம்மா இல்லாத
முதல் ரம்ஜான்
நன்றாய் நினைவிருக்கிறது
அம்மாவைப் போலவே

எல்லா வீடுகளுக்கும்
வெள்ளையடித்த சுவர்களையும்
எங்களுக்கு ஞானத்தையும்
கொண்டு வந்த ரம்ஜான்

அதிகாலையில்
குளிக்க எழுப்பிவிடும்
அம்மாவை எழுப்பிவிட
அன்று யாருமில்லை

தூங்காத இரவை
சூரியன் எடுத்துச் சென்றபின்
எழுந்தோம்

உலகம் முழுவதற்கும் போதுமான
நிராதரவும் ஏழ்மையும்
எங்கள் வீட்டில் கப்பிக்கிடந்தது

பிறரது
இரக்கத்தின் கனத்தைப்
பொறுக்கச் சக்தியில்லாத தங்கை
கொடுத்தனுப்பபட்ட பட்சணங்களை
திருப்பியனுப்பிவிட்டு
ஐதிகம் மீறி
எண்ணைய்ச் சட்டி பற்றவைத்தாள்

தந்தை சாப்பிடாமலே
தொழுகைக்குச் சென்றார்
அவரைப் போன்றோரின்
காதல் பற்றி
கவிதைகளில் குறிப்பிடப்படுவதில்லை

சின்னத தம்பியைக்
கட்டாயப்படுத்திப் புத்தாடை அணிவித்தோம்
அம்மா இறந்த இரவில்
இனிமேல் அம்மா வரவே வராதா?
என்றழுத பிள்ளையை
அப்படியே விட்டுவிட முடியாது

ஆண்டுக்கொருமுறை
தெரு எல்லைகள் கடந்து
வீடு வீடாய்ச் செல்லும்
உறவுக்காரப் பெண்கள்
எங்கள் வீட்டிற்குள்
நுழையாமலே கடந்து சென்றனர்

நரம்புகளைத் தூண்டும்
மந்திரங்களின் பேரொலியுடன்
தொழுகை ஊர்வலம்
வீதியில் சென்றது

பாட்டியின் கைகள்
ஏன் அவ்வளவு பயங்கரமாய்
நடுங்கின?

மூலைக்கு மூலை
சாவு சிரித்தது

அம்மாவை
நீலம் பாரித்த முகத்துடன்
மீண்டும் தூக்கிவந்து
கிடத்தியது போலிருந்தது

முந்தைய ரம்ஜானில்
இந்த அளவுக்கு
இல்லாமல் போவோம் என
நினைத்திருப்பாளா?

பண்டிகைகள் கொண்டாடாத
நாத்திகனான நான்
முகத்தை மூடிக்கொண்டு
அழுதேன்

பின்னர்
வேறு ரம்ஜான்கள் வந்தன

அதிகாலைக் குளியல்
வெள்ளையடித்த சுவர்கள்
வீட்டில் கூட்டம்
புத்தாடைகளின் நறுமணம்
அம்மா இடத்தில் அண்ணி

எல்லாமே
எப்படியோ
சரிக்கட்டப்பட்டு
திரும்பிவிடுகிறது

ஆனால்
நானந்த
முதல் ரம்ஜானை
பத்திரமாய் வைத்திருப்பேன்

ஏனெனில் அது
அல்லாவை எதிர்த்து
அம்மாவுக்காக
கொண்டாடப்பட்ட ரம்ஜான்

Tuesday, October 4, 2011

கதவை சுண்டாதே - பசுவய்யா

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியை கட்ட கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
அவர் தொலைபேசி எண் ? என்பாய்
கையால் ஆகாதவன் என என்னைச் சொல்லாமல் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம் சரித்துவிட்டும் போவாய்
ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால் என் கதவைச் சுண்டாதே
தயவு செய்து ...

 - பசுவய்யா

வாழ்க்கை - பசுவய்யா

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை.
- பசுவய்யா

நகுலன் கவிதைகள்

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

==================================================

எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

- நகுலன்

வருத்தம் - பசுவய்யா

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைகலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில்வித்தை
பின் வாள்வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேடல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர் வாழும் கானல்.

- பசுவய்யா

கல்யாண்ஜி கவிதைகள்

பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.

திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்

அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
'கோலம் நல்லா வந்த '
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.

புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ
விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.

உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது,
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.


- கல்யாண்ஜி, 'அந்நியமற்ற நதி' தொகுப்பிலிருந்து 

கல்யாண்ஜி கவிதைகள்

தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

- கல்யாண்ஜி, 'அந்நியமற்ற நதி' தொகுப்பிலிருந்து